கரோனா அச்சுறுத்தலால் ஏற்பட்டுள்ள நெருக்கடியான இக்காலம் பிக்பாஸ் வீட்டில் இருப்பது போல உள்ளது என ஷிகர் தவான் கூறியுள்ளார்.
கரோனா காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட 13-வது ஐபிஎல் தொடர் வரும் 19-ம் தேதி அமீரகத்தில் தொடங்க இருக்கிறது. முதல் போட்டியில் சென்னை அணி மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. கரோனா அச்சுறுத்தல் நிறைந்த நெருக்கடியான சூழலில் இத்தொடர் நடைபெறுவதால் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை பிசிசிஐ பலப்படுத்தியிருக்கிறது. அமீரகம் சென்ற வீரர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு, அங்கு அவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் கரோனா தொற்று இல்லையென்பது உறுதி செய்யப்பட்ட பின் வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டனர். டெல்லி கேபிடல்ஸ் அணி வீரரான ஷிகர் தவான் நெருக்கடியான இக்காலகட்டம் குறித்து தற்போது பேசியுள்ளார்.
அதில் அவர், "நம் மனவலிமையை சோதிக்க இது சிறந்த தருணமாக உள்ளது. பிக்பாஸ் வீட்டிற்குள் இருப்பது போன்று உள்ளது. இத்தருணம் அனைவருக்கும் புதுமையானது. தனிமையில் நாம், நம்முடன் எவ்வாறு உறவாடிக்கொள்கிறோம் என்பதில்தான் அனைத்தும் இருக்கிறது. நாமே நமக்கு சிறந்த நண்பராகவும் இருக்க முடியும், எதிரியாகவும் இருக்க முடியும். எனது உடல் வலிமை மற்றும் மனவலிமையை சரியான அளவில் வைத்துள்ளேன். உடற்பயிற்சி மற்றும் யோகா இதற்கு உதவுகிறது" என்றார்.