Skip to main content

குல்தீப் மேஜிக் எடுபடுமா? இரண்டாவது டெஸ்டில் இந்தியா!

Published on 10/08/2018 | Edited on 10/08/2018
India

 

 

 

இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி களமிறங்கும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது. லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கவிருந்த இந்த ஆட்டம் மழை குறுக்கிட்டதால், ஒரு பந்துகூட வீசப்படாமல் முடித்துக்கொள்ளப்பட்டது. இந்நிலையில், போட்டி நேரத்தில் அரை மணிநேரம் முன்பாகவே இன்றைய போட்டி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

முன்னதாக, பிர்மிங்காம் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இங்கிலாந்தின் ஆயிரமாவது டெஸ்ட் போட்டி என்பதால், வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றது அந்த அணி. இந்நிலையில், இன்று நடைபெறும் போட்டியிலும் வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்த அந்த அணி முயற்சித்து வருகிறது. 
 

 

 

லார்ட்ஸ் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டமான இன்று, இரண்டு அணிகளும் வலுவான நிலையில் களமிறங்கியுள்ளன. இங்கிலாந்து அணியின் அளவுக்கதிகமான இடதுகை ஆட்டக்காரர்கள் இருந்ததால், அஸ்வினை சமாளிக்க முடியாமல் போனது. அதை மாற்ற அந்த அணியில் மாலனுக்கு பதில் போப்ஸும், ஸ்டோக்சுக்கு பதில் வோக்ஸும் களமிறங்கியுள்ளனர். இருந்தாலும், அந்த அணியில் வேகப்பந்து வீச்சாளர்களே அதிகம். அதேசமயம், இந்திய அணியில் ஷிகர் தவானுக்கு பதிலாக புஜாராவும், உமேஷ் யாதவுக்கு பதில் குல்தீப் யாதவ்வும் களமிறங்கியுள்ளனர். 
 

ஏற்கெனவே, குல்தீப் யாதவ்வின் சுழலில் சிக்கித் தவித்த இங்கிலாந்து அணி, அவரை எதிர்கொள்ள பிரத்யேக பயிற்சி மேற்கொண்டது. இந்நிலையில், தற்போது இந்திய அணியில் குல்தீப் இடம்பெற்றிருப்பது கூடுதல் பலமாகவே பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலையில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வுசெய்து, விளையாடி வருகிறது.