இந்திய அணியில் தோனி இடத்தை நிரப்ப, ரிஷப் பண்ட் சிறந்த தேர்வாக இருப்பார் என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் மூத்த வீரரும், முன்னாள் கேப்டனுமான தோனி கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி சர்வதேச போட்டிகளில் இருந்து முழுமையாக ஓய்வு பெற்றார். விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாக அணிக்கு தோனி அளித்து வந்த பங்களிப்பு அளப்பரியது. கடைசியாக விளையாடிய போட்டிகளில் அவரது ஆட்டம் குறித்து விமர்சனங்கள் எழுந்தாலும், அணியில் அவரது இடம் என்பது மிக முக்கியமானது. இனி எதிர்வர இருக்கும் போட்டிகளில் அவர் இடத்தை எந்த வீரரைக் கொண்டு நிரப்புவது என்று முடிவெடுக்க முடியாமல் பிசிசிஐ நிர்வாகம் திணறி வருகிறது. மூத்த வீரர்கள் பலரும் இது குறித்து தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளரான சஞ்சய் பங்கர், இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார்.
அதில் அவர், "விக்கெட் கீப்பிங்கை அடிப்படையாக வைத்து பார்க்கும் போது, ரிஷப் பண்ட் சிறந்த தேர்வாக இருப்பார் என்று நினைக்கிறேன். நடப்பு ஐபிஎல் தொடரை அவர் தொடங்கிய விதம் சிறப்பாக இருந்தது. இடது கை பேட்ஸ்மேன்கள் அணியில் இருப்பது மிக முக்கியம். மிடில் ஆர்டரில் விளையாடும்போது வலது கை, இடது கை பேட்ஸ்மேன்கள் சரியான கலவையில் இருப்பது அவசியம்" எனக் கூறினார்.