ஐபிஎல் 2024இன் 39 ஆவது லீக் ஆட்டம் சென்னை மற்றும் லக்னோ அணிகளுக்கிடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க ஆட்டக்காரர்களாக ருத்ராஜ் கெய்க்வாட் மற்றும் ரகானேவும் களமிறங்கினர். தொடக்கத்திலேயே ரகானே 1 ரன்னில் ஆட்டம் இழந்தார். அவரை தொடர்ந்து வந்த டாரியல் மிட்செல் 11 ரன்களும் ஜடேஜா 17 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய சிவம் துபே 27 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருதுராஜ் 60 பந்துகளில் 108 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இறுதியாக 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 210 ரன்களை சென்னை அணியினர் எடுத்தனர்.
211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது லக்னோ அணி. லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக குவிண்டன் டி காக்கும், கே.எல்.ராகுலும் களமிறங்கினர். 3 பந்துகளில் ரன் எடுக்காமல் குவிண்டன் டி காக் ஆட்டம் இழக்க, அவரைத் தொடர்ந்து மார்கஸ் ஸ்டாய்னிஸ் களமிறங்கினார். அவர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில் மறுமுனையில் 14 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து கே.எல்.ராகுல் ஆட்டம் இழந்தார்.
அவரைத் தொடர்ந்து வந்த படிக்கல் 19 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். பின்னர் களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் 19 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மறுமுனையில் நின்று அபாரமாக, ஆடி 63 பந்துகளில் 124 ரன்கள் எடுத்து ஸ்டாய்னிஸ் லக்னோ அணியை வெற்றி பெறச் செய்தார். லக்னோ அணி இறுதியாக 4 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்து வெற்றியைத் தனதாக்கிக்கொண்டனர். கடந்த போட்டியிலும் லக்னோ அணி சென்னை அணியை தோற்கடித்த நிலையில் தற்போது இரண்டாவது முறையாகவும் சென்னை அணியை லக்னோ அணி தோற்கடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.