இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன் ஒரு பகுதியாக 4 வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நேற்று முன்தினம் (23.02.2024) தொடங்கியது. அதன்படி முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 353 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இந்திய அணி 307 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய இங்கிலாந்து அணி 10 விக்கெட்டுகள் இழப்பிற்கு வெறும் 145 ரன்கள் மட்டுமே எடுத்தது.இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின் 5 விக்கெட்களையும், குல்தீப் யாதவ் 4 விக்கெட்களையும், ஜடேஜா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். இதன் மூலம் இந்திய அணிக்கு இங்கிலாந்து அணி 192 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
தொடர்ந்து 192 ரன்கள் என்ற எளிதான இலக்கை இந்திய அணி துரத்தியது. இதில் கேப்டன் ரோஹித் சிறப்பான துவக்கம் தந்தார். 3ஆவது நாள் ஆட்ட நேர முடிவில், விக்கெட் இழப்பின்றி 40 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து 4 ஆம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் 37 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய ரோஹித் அரைசதம் கடந்தார். ரோஹித் 55 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த பட்டிதார் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து மீண்டும் சொதப்பினார்.
அடுத்து வந்த ஜடேஜா 4 ரன்களில் ஆட்டமிழக்க, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சர்பிராஸ்கான் கோல்டன் டக் ஆனார். பின்னர் வந்த ஜுரேல் முதல் இன்னிங்ஸைப் போல பொறுமையாக ஆடினார். கில், ஜுரேல் இணை இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றது. 61 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 192 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கில் 52 ரன்களும், ஜுரேல் 39 ரன்களும் எடுத்தனர்.
ஆட்ட நாயகனாக இரண்டு இன்னிங்ஸிலும் சிறப்பாக ஆடிய ஜுரேல் தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் சொந்த மண்ணில் இந்திய அணிக்கு 33 ஆவது முறையாக 200க்கும் குறைவான இலக்கு கிடைத்து, அதில் 30 ஆவது முறையாக சேஸ் செய்து சாதனை படைத்துள்ளது. 3 முறை டிரா செய்துள்ளது. ஒரு முறை கூட தோற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை, ஒரு போட்டி மீதமிருக்கும் நிலையில் 3-1 என வென்றுள்ளது. இந்த தொடரைக் கைப்பற்றியதன் மூலம் 2013இல் இருந்து தற்போது வரை சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 17 சீரிஸ்களை வென்று சாதனை படைத்து, இந்த சாதனையில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.