இந்தியா - ஆஸ்திரேலியாவிற்கு எதிரேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. ரஹானே, பும்ரா, அஸ்வின் ஆகியோர் மட்டுமின்றி, அறிமுக வீரர்கள் சிராஜ் மற்றும் கில் ஆகியோரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இந்தியாவின் வெற்றியைத் தொடர்ந்து ரஹானே, அஸ்வின் ஆகியோரை பாராட்டியுள்ள சச்சின், அறிமுக வீரர்கள் சிராஜ் மற்றும் கில்லையும் புகழ்ந்துள்ளார். இதுதொடர்பாக அவர், "ரஹானே அற்புதமாக பேட் செய்தார். அவர் அமைதியாகவும், நிதானமாகவும் இருந்தார். அவர் ஆக்கிரோஷமான நோக்கத்தைக் கொண்டிருந்தார், ஆனால் அது அமைதி மற்றும் உறுதியால் சரியான அளவில் சமன்செய்யப்பட்டது. நமது அணி விளையாடிய விதம், ரஹானே அணியை வழிநடத்திய விதம் ஆகியவற்றை பார்க்கும்போது நமது அணியின் சிறப்பான ஆட்டம் இது என நினைக்கிறேன். சுப்மன் கில் நம்பிக்கையுடன் இருந்தார்" என கூறியுள்ளார்.
மேலும் சச்சின், "சிராஜ் எப்படி பந்து வீசினார் என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. அவர் தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுவது போலவே எனக்குத் தெரியவில்லை. அவர் தனது முதல் ஓவரை வீசிய விதத்தையும், பின்னர் அதை படிப்படியாக கட்டியெழுப்பிய விதத்தையும் பார்க்கும்போது, அவர் தனது முதல் போட்டியை விளையாடுவது போலவே தெரியவில்லை. திட்டங்கள் நன்றாக யோசிக்கப்பட்டிருந்தன. அதை அவர் சிறப்பாக செயல்படுத்தினார். இரண்டு அறிமுக ஆட்டக்காரர்களுமே திட்டங்களைச் செயல்படுத்துவதில் நன்றாக இருந்தனர்" என்றும் பாராட்டியுள்ளார்.