16 ஆவது ஐபிஎல் சீசனின் 35ஆவது லீக் போட்டி அஹமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 207 ரன்களைக் குவித்தது. அதிகபட்சமாக கில் 56 ரன்களையும் மில்லர் 46 ரன்களையும் அபினவ் மனோகர் 42 ரன்களையும் எடுத்தனர். மும்பை அணியில் சாவ்லா 3 விக்கெட்களையும் அர்ஜுன் டெண்டுல்கர், பெஹ்ரெண்ட்ராஃப், மெரிட்ரித் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இன்றைய போட்டியில் 207 ரன்களை குவித்ததன் மூலம் குஜராத் அணி தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது. இதற்கு முன்பு கொல்கத்தா அணிக்கெதிராக 204 ரன்களை குவித்ததே அதிகபட்சமாக இருந்தது. இந்த போட்டியில் குஜராத் அணி கடைசி 5 ஓவர்களில் மட்டும் 77 ரன்களை குவித்திருந்தது.
208 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய மும்பை அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தது. வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற மும்பை அணி 90 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து திணறியது. இறுதியில் வதேரா கொஞ்சம் ரன்களை அடிக்க மும்பை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்பிற்கு 152 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.
இந்த போட்டியில் மும்பை அணி நடப்பு ஐபிஎல் தொடரில் மூன்றாவது குறைந்தபட்ச பவர்ப்ளே ஸ்கோரை பதிவு செய்துள்ளது. இது அந்த அணிக்கு இரண்டாவது முறை. முன்னதாக பெங்களூர் அணிக்கு எதிராக 29 ரன்களை எடுத்திருந்தது. முதல் இடத்தில் குஜராத்திற்கு எதிராக ராஜஸ்தான் அணி 26 ரன்களை எடுத்திருந்ததே குறைந்தபட்ச ஸ்கோராக உள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரில் 7 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை அணி 3ல் மற்றுமே வெற்றி பெற்று 4 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. 7 போட்டிகளில் பேட்டிங் செய்துள்ள ரோஹித் சர்மா 182 ரன்களை எடுத்துள்ளார். அதிகபட்சமாக 65 ரன்களை எடுத்துள்ளார்.
இதுகுறித்து கூறியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், “மும்பை இந்தியன்ஸ் அணியில் பேட்டிங் ஆர்டரில் மாற்றம் மேற்கொள்ள வேண்டியது அவசியம். உண்மையாகவே, ரோகித் சர்மா இந்த சீசனில் இருந்து கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த ஓய்வின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு முழு உடற்தகுதியுடன் இருக்க முடியும். ரோஹித் சர்மா நடப்பு ஐபிஎல் தொடரின் கடைசி சில போட்டிகளில் வேண்டுமானால் மீண்டும் விளையாட வரலாம். ஆனால், இப்போதைக்கு அவர் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும்.
அவர் தற்போது ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி குறித்து யோசித்துக் கொண்டிருக்கக் கூடும். எனக்குத் தெரியவில்லை. எனக்கு தெரிந்து அவருக்கு இச்சமயத்தில் சிறிது ஓய்வு வேண்டும் என நம்புகிறேன். அவர் இறுதி மூன்று அல்லது 4 போட்டிகளில் மீண்டும் விளையாட வேண்டும் அப்போது அவருக்கு உலகக் கோப்பைக்கான ஒரு நிலைத்தன்மை கிடைக்கும்” எனக் கூறியுள்ளார்.
மும்பை அணி அடுத்து ராஜஸ்தான் அணியை தனது சொந்த மண்ணில் எதிர்கொள்கிறது. பஞ்சாப் மற்றும் குஜராத் அணிகளுடனான இரு தோல்விக்குப் பின் ராஜஸ்தான் அணியுடன் வரும் ஏப்ரல் 30ல் மோதுவதால் அப்போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் மும்பை அணி உள்ளது.