16 ஆவது ஐபிஎல் சீசனின் 22 ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா மும்பை அணிகள் மோதின. மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
மும்பை அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் செயல்பட்டார். இந்த போட்டியில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் அறிமுகமானார். முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி வெங்கடேஷ் ஐயரின் அபார ஆட்டத்தால் 185 ரன்களை எட்டியது. சிறப்பாக ஆடி சதம் விளாசிய வெங்கடேஷ் ஐயர் கொல்கத்தா அணிக்காக இரண்டாவது முறையாக சதமடித்த வீரரானார். 2008 ஆம் ஆண்டு மெக்கலம் சதம் அடித்ததன் பிறகு 15 வருடங்கள் கழித்து வெங்கடேஷ் ஐயர் சதம் அடித்து கொல்கத்தா அணியின் நெடுநாள் கனவை நிறைவேற்றியுள்ளார்.
186 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய மும்பை அணியில் இம்பேக்ட் வீரர் ரோஹித் சர்மா 20 ரன்களை மட்டுமே எடுத்தாலும் கொல்கத்தா அணிக்கு 1000 ரன்களை எடுத்த வீரர் ஆனார். தனி ஒரு அணிக்கு எதிராக அதிக ரன்களை எடுத்த வீரராக மாறிய ரோஹித் முதலிடத்தில் உள்ளார். இதனை அடுத்து ஷிகர் தவான் சென்னை அணிக்கு எதிராக 1029 ரன்களைக் குவித்து இரண்டாம் இடத்திலும், டேவிட் வார்னர் 1018 ரன்களைக் குவித்து மூன்றாம் இடத்திலும், விராட் கோலி சென்னை அணிக்கு அணிக்கு எதிராக 979 ரன்களைக் குவித்து நான்காம் இடத்திலும் உள்ளார்.
நேற்றைய போட்டியில் மும்பை அணி பவர் ப்ளேவில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 72 ரன்களைக் குவித்தது. இதன் மூலம் 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் பவர் ப்ளேவில் அதிக ரன்களைக் குவித்த 4 ஆவது அணியாக மும்பை அணி உள்ளது. முதல் இடத்தில் ராஜஸ்தான் அணி ஹைதராபாத் அணிக்காக 85 ரன்களைக் குவித்ததே அதிகபட்சமாக உள்ளது.
எதிரணி வீரர் சதமடித்தும் வெற்றி பெற்ற அணிகளின் பட்டியலில் மும்பை அணி முதலிடத்தில் உள்ளது. 4 முறை எதிரணி வீரர் சதமடித்தும் மும்பை அணி வெற்றி பெற்றுள்ளது. வெங்கடேஷ் ஐயர், யூசுப் பதான், ஹசிம் அம்லா, கே.எல்.ராகுல் ஆகியோர் மும்பை அணிக்கு எதிராக சதமடித்தும் அப்போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளனர். இதற்கு அடுத்த வரிசையில் குஜராத் லயன்ஸ், ராஜஸ்தான் அணிகள் தலா 3 முறை எதிரணி வீரர்கள் சதமடித்தும் வெற்றி பெற்ற அணிகளாக உள்ளன.
நேற்றைய ஐ.பி.எல் போட்டியில் மும்பை அணி வென்றதன் மூலம் இரு அணிகளும் நேருக்கு நேர் 32 முறை மோதி 23 முறை மும்பை அணியும் கொல்கத்தா அணி 9 முறையும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.