Skip to main content

சச்சினா.. கோலியா.. சிறந்தவர் யார்? அக்தரின் அசரவைத்த பதில்...!

Published on 17/04/2019 | Edited on 17/04/2019

சச்சின் - லாரா, சச்சின் - பாண்டிங் ஆகிய ஒப்பீடுகள் சென்ற தலைமுறையில் அதிகமாக நடைபெற்றன. இந்த தலைமுறையில் கோலி - ஸ்மித், கோலி - வில்லியம்சன் போன்ற ஒப்பீடுகள் சில ஆண்டுகளாக இருந்து வந்தன. ஆனால் கடந்த 1 வருடமாக யாரும் தொடமுடியாத உயரத்திற்கு பேட்டிங்கில் மற்றவர்களைவிட அடுத்த லெவலுக்கு சென்றுவிட்டார் கோலி. சச்சினின் சதங்களையும், சாதனைகளையும் முறியடித்து வரும் கோலி விரைவில் அதிக ரன்கள் மற்றும் அதிக சதங்கள் ஆகிய சாதனைகளையும் முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 

shoaib akhtar

 

இந்த நிலையில் சென்ற தலைமுறையில் விளையாடிய சச்சினையும், இந்த தலைமுறையில் விளையாடி வரும் விராட் கோலியையும் ஒப்பிடுவது ரசிகர்களுக்கும், முன்னாள் வீரர்களுக்கும் வாடிக்கையாகிவிட்டது. இரண்டு தலைமுறையிலும் கிரிக்கெட் பலவிதமான பல மாறுதல்களை சந்தித்துள்ளது. வெவ்வேறு தலைமுறையில் விளையாடிய வீரர்களின் புள்ளிவிவரங்களையும், அவர்களையும் ஒப்பிடுவது முற்றிலும் தவறான ஒன்று. 
 

மேலும் விராட் கோலி பல முறை இது போன்ற ஒப்பீடுகளை மறுத்து, சச்சின் உடன் ஒப்பிட்டு பேசுவது தவறான ஒன்று எனக் கூறியுள்ளார். சச்சின் என்பவர் கடவுள். எந்தவொரு வீரரின் நிலையிலிருந்தும் இரண்டு மடங்கு பெரியவர். சச்சின் என்ற ஒருவருக்கு மாற்றே இல்லை என்று கோலி கூறியிருந்தார். 
 

virat

 

முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் ஒரு சில நாட்களுக்கு முன்பு தனது ட்விட்டரில் ஒரு விவாதத் தொகுப்பை ஏற்பாடு செய்திருந்தார். அதில் அவரது ரசிகர்கள் மற்றும் பிற நபர்கள் அக்தரை கேள்விகளை கேட்கலாம். அந்த விவாதத் தொகுப்பில் சச்சின் டெண்டுல்கர் அல்லது விராட் கோலி ஆகிய இருவரில் அக்தரின் தேர்வு எது என்று ஒரு நபர் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு சச்சின் டெண்டுல்கர் தான் எனது தேர்வு என்று சோயப் அக்தர் பதிலளித்துள்ளார்.
 

பேட்டிங்கை பொறுத்த வரையிலும், சேசிங்கிலும் விராட் கோலி மற்றவர்களைவிட (சச்சின், பாண்டிங், லாரா) சிறந்தவர் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாஹன் கூறியுள்ளார். வெவ்வேறு தலைமுறை, பல மாறுபட்ட மைதானத்தின் தன்மைகள் மற்றும் பல்வேறு வித்தியாசமான பந்துவீச்சாளர்களை எதிர்கொண்ட இருவரை ஒப்பிடுவது தவறான ஒன்று என்று சமீபத்தில் வார்னே தெரிவித்திருந்தார். 
 

sachin

 

2003-ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அக்தர் பவுலிங்கை தெறிக்கவிட்டார் சச்சின். அது கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் சிறந்த ஒரு ஆட்டமாக பார்க்கப்படுகிறது. அக்தர் பந்திலேயே ஆட்டமிழந்தார்.  
 

2004-ஆம் ஆண்டு சாம்சங் கோப்பை முதல் ஒருநாள் போட்டியில் அக்தர் பந்தில் அதிரடியாக பவுண்டரிகள் அடித்த சச்சின், அக்தர் பந்திலேயே வெளியேறினார். 2004-ஆம் ஆண்டு சாம்சங் கோப்பை இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு 330 ரன்கள் இலக்கை வைத்தது பாகிஸ்தான் அணி. அக்தர் உள்ளிட்ட பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை திணற வைத்த சச்சின் 141 ரன்கள் விளாசினார்.    
 

சச்சின் - அக்தர் சந்திப்புகள் சிறப்பு வாய்ந்த ஒன்று. பெரும்பாலான போட்டிகளில் சச்சின் அக்தர் பந்துகளை விளாசியுள்ளார். அதே சமயம் சில போட்டிகளில் அவரின் பவுலிங்கில் அவுட் ஆகியுள்ளார். சச்சின் டெண்டுல்கர், பாண்டிங் உள்ளிட்ட உலகின் சிறந்த பேட்ஸ்மேன்களுக்கு சவால்விடும் பவுலராக வலம் வந்தார் அக்தர். அதேபோல அக்தரின் பவுலிங்கை விளாசியவர்களில் முதலிடம் சச்சினுக்குத்தான். இந்த நிலையில் சச்சின் தான் சிறந்த பேட்ஸ்மேன் என்று அக்தர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.