இந்திய கிரிக்கெட் வாரியம், தங்கள் நாட்டு கிரிக்கெட் வாரியத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி கிரிக்கெட் தொடரில் விளையாடவில்லை. எனவே இந்த போட்டி தொடர்கள் நடைபெறாததால் தங்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கு நஷ்டஈடாக இந்திய கிரிக்கெட் வாரியம் ரூ.481 கோடி வழங்க வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சார்பில் கடந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கமிட்டியில் வழக்கு தொடுக்கப்பட்டது.
இதன் விசாரணை ஐசிசி சார்பில் நடத்தப்பட்டு பாகிஸ்தானின் வழக்கை ஏற்றுக்கொள்ள முடியாது என தள்ளுபடி செய்தது. மேலும் இந்த வழக்கிற்காக இந்தியா செலவு செய்த தொகையை நஷ்ட ஈடாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வழங்க வேண்டும் என ஐசிசி உத்தரவிட்டது. அதன்படி 11 கோடி ரூபாய் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு வழங்கப்பட வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு உத்தரவிடப்பட்டது. தற்போது அந்த தொகையை இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு வழங்கிவிட்டதாக பாகிஸ்தான் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.