
16 ஆவது ஐபிஎல் சீசன் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டுள்ளது. அனைத்து அணிகளும் ப்ளேஆஃப் சுற்றுக்கு முன்னேற கடுமையாகப் போராடி வரும் நிலையில், ஆட்டத்தின் இறுதி பந்து வரை பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் ஒவ்வொரு போட்டியும் செல்கிறது.
இதில் சென்னை அணி 6 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 3 ஆவது இடத்தில் உள்ளது. அனுபவமில்லாத பந்துவீச்சாளர்கள் இருந்த போதும் ஒவ்வொரு போட்டியையும் சென்னை அணி கடுமையாகப் போராடி வென்று வருகிறது. கடந்த சீசன்களை போலவே இந்த சீசனும் தோனி அலை அனைத்து மைதானங்களிலும் எதிரொலிக்கிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் 28 பந்துகளை மட்டுமே விளையாடியுள்ள தோனி 210 ஸ்ட்ரைக் ரேட்டுடன் அசத்தி வருகிறார்.
கடந்த சில தினங்கள் முன் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எனக்கு நிச்சயமாக வயதாகிவிட்டது. அதை மறைக்க முடியாது. என் கிரிக்கெட் அத்தியாயத்தில் இது கடைசிக்கட்டம்” எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தோனி குறித்து தனது ட்விட்டர் பதிவில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “சச்சின் அவுட் ஆனபிறகு டிவியை ஆப் செய்த ஒட்டுமொத்த இந்தியாவையும் இறுதிவரை மேட்ச் பார்க்க செய்த இளைஞன்(இன்றும்). தோனி என்ற ஒற்றைப்பெயரே இன்றும் கோடிக்கணக்கான ரசிகர்களை கிரிக்கெட் பார்க்க வைக்கிறது. உன் ஓய்வறிந்து நீ குவித்த கோப்பைகளும் கண்ணீர் வடிக்கும்!” எனக் கூறியுள்ளார்.