மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரிம் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. மும்பை வான்கடே மைதானத்தில் வைத்து நடைபெற்ற இந்தப் போட்டியில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்ஸன் அதிகபட்சமாக 47 ரன்கள் எடுத்திருந்தார். 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணிக்கு தொடக்கம் அவ்வளவு சிறப்பாக இல்லை. ஆனாலும், அடுத்தடுத்த ஓவர்களில் சிறப்பாக கணித்து ஆடிய சென்னை அணி, 18.3 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி வெற்றிக்கோப்பையை வென்றது.
தோல்வி குறித்து பேசிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்ஸன், ‘இரண்டாவது இன்னிங்ஸின் பாதிக்கட்டத்தை நெருங்கும்வரை எங்களது ஸ்கோர் கடுமையான நெருக்கடியையே எதிரணிக்கு தந்தது. மைதானமும் எங்களுக்கு சாதகமாகவே இருந்தது. மிதவேக பந்துகளுக்கு நல்ல பலன் கிடைத்தது. எனவே, எதிரணியால் நாங்கள் இலக்காக நிர்ணயித்த 180 ரன்கள் சேஷிங் செய்ய மிகக்கடினமானது என்றே நினைத்தோம்’ என தெரிவித்தார்.
அதேசமயம், வாட்சனின் அதிரடி ஆட்டம் குறித்துப் பேசிய அவர், ‘அது ஒரு அசத்தலான இன்னிங்ஸ். இறுதிப்போட்டியில் தனது அணிக்காக யார் சதம் அடித்தாலும் அது பாராட்டத்தக்க முயற்சிதான். எங்களால் மிகச்சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த வாட்சனைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதுதான் உண்மை’ எனவும் தெரிவித்துள்ளார். நேற்றைய போட்டியில் ஷேன் வாட்சன் 57 பந்துகளில் 117 ரன்கள் விளாசி, அணியின் வெற்றிக்கு வழிவகுத்தது குறிப்பிடத்தக்கது.