Published on 21/06/2018 | Edited on 21/06/2018
ஐ.சி.சி. டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசையில் ஷிகர் தவான் நல்ல முன்னேற்றம் பெற்றுள்ளார்.
ஆப்கானிஸ்தான் அணி வரலாற்றில் தனது முதல் டெஸ்ட் போட்டியை இந்திய அணியுடன் விளையாடியது. பெங்களூருவில் வைத்து நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான முரளி விஜய் - ஷிகர் தவான் இணை தொடக்கம் முதலே அதிரடியாக ஆடி, ரன்குவிப்பில் ஈடுபட்டது, குறிப்பாக, ஷிகர் தவான் மதிய உணவு இடைவேளைக்கு முன்பாகவே தனது சதத்தை நிறைவுசெய்தார். இது உலக சாதனையாகும். அதேபோல், மதிய உணவுக்கு முன்பாக சதமடித்த முதல் இந்தியர் என்ற சாதனையையும் அவர் பிடித்தார்.
இந்நிலையில், டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் பேட்ஸ்மென்களுக்கான தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டது. அதில், முன்னதாக 34ஆவது இடத்தில் இருந்த ஷிகர் தவான், 10 இடங்கள் முன்னேறி 24ஆவது இடத்தைப் பிடித்தார். டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் ஷிகருக்கு இதுவே சிறந்த தரமாகும். அதேபோட்டியில் சதமடித்த முரளி விஜய், 23ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் ரவீந்திர ஜடேஜா மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.