விராட் கோலியிடம் குறிப்பிடும்படி எந்த பலவீனமும் இல்லை என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான ஜேசன் கில்லெஸ்பி தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள், 3 இருபது ஓவர், 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி வரும் 27-ம் தேதி சிட்னியில் தொடங்குகிறது.
கடந்த முறை போல இம்முறையும் தொடரைக் கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்போடு இந்திய அணியும், கடந்த முறை அடைந்த தோல்விக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்ற முனைப்போடு ஆஸ்திரேலிய அணியும் தயாராகி வருகிறது. இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான ஜேசன் கில்லெஸ்பி விராட்கோலி குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அதில் அவர், "ஆஸ்திரேலியர்கள் விராட் கோலியின் விக்கெட்டை எளிதில் கைப்பற்ற வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால், விராட் கோலியிடம் குறிப்பிடும்படி எந்த பலவீனமும் இல்லை. அதற்காக ஆஸ்திரேலிய பவுலர்கள் கருணையற்று நடந்து கொள்ள வேண்டியதில்லை. களத்தில் பொறுமையாக நடந்து கொள்ள வேண்டியது முக்கியம். விராட் கோலிக்கு எதிராக சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்த முடியும் என்று அவர்கள் நம்பிக்கை கொள்வார்கள்" எனக் கூறினார்.