2016-ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிற்கு அறிமுகமானார் பும்ரா. மூன்றே ஆண்டுகளில் அசுர வளர்ச்சியடைந்து இன்று உலகின் நம்பர் 1 பவுலராக வலம்வருகிறார். ஒரு முறை அல்ல; இரு முறை அல்ல; மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இக்கட்டான சூழ்நிலைகளில் ஒவ்வொரு முறையும் தன்னுடைய பவுலிங் மூலம் வெற்றியை தேடித் தந்தார்.
1992-ஆம் ஆண்டு உலகக்கோப்பையின்போது கபில்தேவ் பவுலிங் தரவரிசையில் 2-ஆம் இடத்தில் இருந்தார். அதற்கு பிறகு ஒரு இந்திய பவுலர் உலகக்கோப்பையின்போது பவுலிங் தரவரிசையில் டாப் 5 இடத்தில் இருப்பது இப்போதுதான். பும்ரா நம்பர் 1 பவுலராக உலகக்கோப்பை போட்டிகளில் களமிறங்குகிறார்.
அகமதபாத்தில் பிறந்த பும்ரா தான் விளையாடும் முதல் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் லீடிங் ஃபாஸ்ட் பவுலராக, இந்திய அணியின் பவுலிங் யூனிட்டை வழிநடத்தவுள்ளார். பும்ராவின் முழு பெயர் ஜஸ்பிரிட் ஜஸ்பிர் சிங் பும்ரா. சிறு வயதில் இருந்தே படிப்பை விட கிரிக்கெட்டின் மீது ஆர்வம் கொண்டிருந்தார். பெற்றோர்களும் பும்ராவின் விருப்பம் போல நடந்து கொண்டனர்.
2013-ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற சையது முஷ்டாக் அலி டி20 போட்டியை காண சென்றிருந்தார், மும்பை இந்தியன்ஸ் அணியின் அப்போதைய பயிற்சியாளர் ஜான் ரைட். பவுன்சர்களாலும், பர்பெக்ட் லென்த்களாலும் எதிரணியை திணறடித்து கொண்டிருந்தான் ஒரு சிறுவன். வித்தியாசமான பவுலிங் ஸ்டைல், பவுலிங் ஸ்கில் ஆகியவை முன்னாள் இந்திய அணியின் பயிற்சியாளரின் கவனத்தை பெற்றன. இதன் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பிடித்தார் பும்ரா. அதுதான் பும்ராவின் வாழ்க்கையில் திருப்புமுனையாக இருந்தது.
மிட்செல் ஜான்சன், வாசிம் அக்ரம் மற்றும் பிரெட் லீ ஆகியோர் பும்ராவின் பேவரட் பவுலர்கள். அவர்களது பவுலிங் வீடியோக்களை பார்த்து, அதிலிருந்து பவுலிங் ஸ்கில்களை கற்றுக் கொண்டுள்ளார் பும்ரா. ஜாஹீர் கான், மலிங்கா, ஷேன் பாண்ட், மிட்செல் ஜான்சன் ஆகியோர் மும்பை அணியில் இருந்தது பும்ராவை மேலும் மேம்படுத்த பெருமளவில் உதவியுள்ளது.
1990-களில் யார்க்கர் பவுலிங் என்றால் பாகிஸ்தான் அணியின் வாசிம் அக்ரம் தான் துல்லியமாக யார்க்கர் வீசி வந்தார். தற்போது அதேபோல துல்லியமாக யார்க்கர் வீசுவதில் தன்னை மேம்படுத்தி வருகிறார் பும்ரா. குறைந்த நாட்களிலேயே சிறப்பாக பவுலிங் செய்யும் திறமையை வளர்த்துக்கொண்டது ஆச்சரியமான ஒன்றுதான்.
இன்-ஸ்விங் யார்க்கர், அவுட்-ஸ்விங் யார்க்கர், ஸ்லொவ்-யார்க்கர், வைட்- யார்க்கர், ஃபாஸ்ட் பவுன்சர்கள், பேட்ஸ்மேன் நகர்வை பொறுத்து அவரை நோக்கி வீசுதல், பேட்ஸ்மேனை திணறடிக்கும் இன்-ஸ்விங் & அவுட்-ஸ்விங், ஸ்லோவ் பால் என பும்ராவின் பவுலிங் பல நுணுக்கங்களை கொண்டுள்ளது.
தற்போது உள்ள காலகட்டத்தில் உலகின் மிகச்சிறந்த ஃபாஸ்ட் பவுலர் பும்ரா தான். அவரது பவுலிங் மிகவும் சிறப்பானது. அவரின் மிகச்சிறந்த பவுலிங் இனிமேல் தான் வெளிப்படும் என முன்னாள் நட்சத்திர பேட்ஸ்மேன் சச்சின் ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு பிறகு தெரிவித்திருந்தார்.
ஒரு பவுலர் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் ஆட்டநாயகன் விருது வாங்குவது அரிதான ஒன்று. 2009-ஆம் ஆண்டு இறுதிப்போட்டியில் கும்ப்ளே தனது சிறந்த பவுலிங் மூலம் ஆட்டநாயகன் விருதை பெற்றார். அதற்கு பிறகு 10 ஆண்டுகள் கழித்து இந்த வருடம் தனது மாஸ் பவுலிங் மூலம் இறுதிப்போட்டியில் ஆட்டநாயகன் விருதை பெற்றார் பும்ரா.
பெரும்பாலும் டெத் ஓவரில் பவுலிங் செய்யும் எந்த வீரரும் சற்று பதட்டமாகவே இருப்பார்கள். ஆனால் பும்ரா டெத் ஓவரில் சிரித்த முகத்துடனும், நிதானமாகவும் பவுலிங் செய்கிறார்.
இந்த ஓவரை எப்படி சிறப்பாக வீச வேண்டும் என்பதை விட இந்த பந்தை எவ்வாறு சிறப்பாக வீச முடியும் என்ற எண்ணமே ஒவ்வொரு பந்தையும் துல்லியமாக வீசுவதற்கு உதவியாக உள்ளது. டெத் ஓவரில் நிதானமாக பவுலிங் செய்வதற்கு இதுதான் காரணம் என்று பும்ரா ஐபிஎல் இறுதிப்போட்டியின் முடிவில் குறிப்பிட்டிருந்தார்.
சமீபத்தில் ஐஐடி-கான்பூர் பேராசிரியர் சஞ்சய் மிட்டல், பும்ரா பவுலிங்கின் வெற்றி ரகசியம் குறித்து கூறியிருந்தார். பும்ரா பவுலிங்கின் வேகம், பவுலிங் ஸ்டைல், பவுலிங் செய்யும்போதுள்ள அவரின் உடல் அசைவு, பந்து சுழலும் விதம் ஆகியவை சேர்ந்து மேக்னஸ் விளைவை ஏற்படுத்துகிறது. பந்தை கீழ் நோக்கி அழுத்தமாக பிட்சில் வீசும்போது பந்து துல்லியமாக முடுக்கிவிடப்பட்டு பேட்ஸ்மேன்களால் சரியாக கணிக்க முடியாமல் போகிறது. சில சமயம் திடீர் பவுன்சர்களும் இதனால் தான் ஏற்படுகின்றன என மிட்டல் விவரித்திருந்தார்.
2018 ஜனவரி மாதத்திற்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் 591 ஓவர்கள் பவுலிங் செய்துள்ளார். 2017 ஜனவரி மாதத்திற்கு பின் ஒருநாள் போட்டிகளில் டெத் ஓவர்களில் 37 விக்கெட்கள் வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளார் பும்ரா. இந்திய அணியின் பயிற்சியாளராக ஜான் ரைட் இருந்தபோது இந்திய அணி பல சாதனைகளை படைத்தது. கங்குலி மற்றும் ஜான் ரைட் இந்திய அணியை கட்டமைத்தனர். பிறகு பும்ரா எனும் அபூர்வ பவுலரை கிரிக்கெட் உலகிற்கு அறிமுகப்படுத்தி மும்பை இந்தியன்ஸ் அணிக்கும், இந்திய அணிக்கும் பெரிதும் உதவியுள்ளார் ஜான் ரைட்.