இங்கிலாந்தில் நடந்து வரும் உலகக்கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வி அடைந்த நிலையில் ரசிகர்கள் பலரும் டீவில்லியர்ஸ் இல்லாதது தான் தோல்விக்கு காரணம் என கூறி வருகின்றனர். இந்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அக்தர், டீவில்லியர்ஸ் மீது கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளார்.
இது குறித்து பேசியுள்ள அவர், "ஐபிஎல் மற்றும் பி.எஸ்.எல் தொடர்களிலிருந்து விலகி உலகக் கோப்பை தொடருக்கு தயாராகுமாறு டீவில்லியர்ஸுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டது. ஆனால் டீவில்லியர்ஸ் பயிற்சிக்கு வருவதற்கு பதிலாக சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார். அவர் நாட்டின் பக்கம் நிற்காமல் அதற்குப் பதிலாக பணத்தைத் தேர்வு செய்தார்.
அவர் ஓய்வை அறிவித்த போது தென் ஆப்பிரிக்கா அணி மோசமான கட்டத்தில் இருந்தது. ஆனால் அப்போது அதனை பற்றி கவலைப்படாமல், தற்போது அவர் மீண்டும் உலகக் கோப்பையில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு விளையாட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளது மிகவும் வருத்தமளிக்கிறது.
டீவில்லயர்ஸ் நாட்டிற்காக விளையாடி இருந்தால் இந்த உலகக் கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி இவ்வளவு மோசமாக தோல்வியடைந்திருக்காது. ஏனென்றால் நடுவரிசை ஆட்டக்காரர் வரிசையில் டீவில்லியர்ஸ் இருந்திருந்தால் அவரது அனுபவம் அணிக்கு கை கொடுத்திருக்கும். ஆனால் டீவில்லியர்ஸ் அதை செய்யவில்லை.
ஐபிஎல் போன்ற தொடர்களில் கவனம் செலுத்தாமல் அவர் நாட்டிற்காக விளையாடியிருக்க வேண்டும்" என கூறியுள்ளார். டீவில்லியர்ஸ் மீதான அவரது கடுமையான விமர்சனம் தற்போது ஆதரவுகளை, எதிர்ப்புகளையும் பெற்று வருகிறது.