Skip to main content

ஈடன் கார்டனில் ராஜஸ்தான் எண்ணம் பலிக்காது? - ஐ.பி.எல். போட்டி #49

Published on 15/05/2018 | Edited on 16/05/2018

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் வைத்து நடைபெறும் இந்தப் போட்டி, இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.

RR

 

 

ஐ.பி.எல். சீசன் 11 தொடங்கி 48 போட்டிகள் முழுமையாக நிறைவடைந்துவிட்டன. தொடருக்கு முந்தைய கணிப்புகள் பலவற்றையும் தோற்கடித்துவிட்டு, ஒரு நிலையான போக்கில் போட்டிகள் நகர்ந்து கொண்டிருக்கின்றன. தொடரில் கலந்துகொண்டுள்ள 8 அணிகளும், தலா 12 போட்டிகளில் களமிறங்கி இருக்கின்றன. அவற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மட்டுமே ப்ளே ஆஃபிற்கு தகுதிபெற்றிருக்கின்றன. மும்பை, பெங்களூரு மற்றும் டெல்லி அணிகள் அந்த வாய்ப்பை இழந்தாலும், மீதமிருக்கும் மூன்று அணிகளில் ப்ளே ஆஃபிற்கு தகுதிபெறும் அணி யார் என்ற போட்டி நிலவுகிறது.

 

அந்தவகையில், ப்ளே ஆஃபிற்கு தகுதிபெறுவதற்கான ரியல் போட்டிகள் இன்றிலிருந்து தொடங்குகின்றன. புள்ளிப்பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் இருக்கும் கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் இன்று களம்காண்கின்றன. தொடர்ந்து மூன்று போட்டிகளில் வெற்றிபெற்றிருந்தாலும், எல்லா போட்டிகளிலும் ஜாஸ் பட்லரை நம்பியே இருக்கவேண்டிய சூழல் இருந்தது. அந்த நிலையை மாற்ற ராஜஸ்தான் அணி என்ன செய்யும் என்பது இரவு தெரிந்துவிடும்.

 

kkr

 

 

இந்த இரண்டு அணிகளும் மோதிய 14 போட்டிகளில் சமமான வெற்றிக்கணக்கை பகிர்ந்திருக்கின்றன. குறிப்பாக இரண்டு போட்டிகள் டிரா ஆகி, சூப்பர் ஓவர் மூலம் ராஜஸ்தான் அணியே வெற்றிபெற்றது. ஈடன் கார்டன் மைதானத்தைப் பொருத்தவரை அங்கு நடந்த ஐந்து போட்டிகளில் ஒரு முறை மட்டுமே ராஜஸ்தான் வெற்றிபெற்றிருக்கிறது. குறிப்பாக அந்த வெற்றிபெற்றதோ 2008ல். இரண்டு ஆண்டுகள் தடை என்று கணக்கில் கொண்டாலும் 8 ஆண்டுகளாக அந்த மைதானத்தில் வெற்றிபெற்றதில்லை.  எனவே, ப்ளே ஆஃபிற்கு செல்லும் ராஜஸ்தானின் எண்ணத்தை கொல்கத்தா பலிக்கவிடாமல் செய்யலாம். அல்லது பழைய தகவல்களை ராஜஸ்தான் பொய்யாக்கலாம். டி20 போட்டிகளில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம்தானே.