ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி லிஸ்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் ஆளாக இடம்பெற்றுவிட்டது. ஆனால், அந்த அணியுடன் மோதப்போகும் இன்னொரு அணி எது என்பது இன்றுதான் தெரியும். சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ள இந்தப் போட்டி, ஈடன் காரட்ன் மைதானத்தில் வைத்து இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.
இந்த சீசனின் தொடக்கத்தில் இருந்து தோற்கடிக்கவே முடியாத அணியாக இருந்த சன்ரைசர்ஸ் ஐதராபாத், சென்னை அணியிடம் முதல் தகுதிச்சுற்றில் படுதோல்வி அடைந்தது. அந்தத் தோல்வியையும் சேர்த்து தொடர்ந்து நான்கு போட்டிகளில் தோல்வியைத் தழுவியிருக்கிறது அந்த அணி. டிஃபெண்டிங் எக்ஸ்பெர்ட்ஸ் என புகழப்பட்ட அந்த அணியால், தொடர்ந்து அதைக் காப்பாற்றிக்கொள்ள முடியவில்லை. இத்தனைக்கும் ஐதராபாத் அணி விளையாடிய முதல் 10 போட்டிகளில் எட்டில் வெற்றிபெற்றிருந்து.
இன்றைய போட்டியில் இன்னொரு அணியான கொல்கத்தா நைட்ரைடர்ஸ், ஐதராபாத் அணிக்கு நேரெதிராக கடைசியாக ஆடிய நான்கு போட்டிகளில் வெற்றிபெற்றிருக்கிறது. ராஜஸ்தான் அணியுடனான எலிமினேட்டரில் அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். இந்த சீசனில் அந்த அணி வீழ்த்திய மொத்த விக்கெட்டுகளில் 50 சதவீதம் வீழ்ந்ததற்கு சுழற்பந்து வீச்சாளர்களே காரணம். அதேபோல், இந்த இரண்டு அணிகளும் மோதிய 14 போட்டிகளில் 9 முறை கொல்கத்தா அணியே வெற்றிபெற்றிருக்கிறது. அதுமட்டுமின்றி, ஈடன் கார்டன் மைதானத்தில் இந்த அணிகள் களமிறங்கிய ஆறு போட்டிகளில் ஒன்றில் மட்டுமே ஐதராபாத் அணி வெற்றிபெற்றிருக்கிறது.
டேபிள் டாப்பராக இருந்த அணியென்றால் கோப்பையை வெல்லும் என்று உறுதியாக சொல்லமுடியாது. 2009, 2012 ஆண்டுகளில் டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும் 2016ஆம் ஆண்டு குஜராத் லயன்ஸ் அணிகள் அதையே உணர்த்தின. ஆனால், டி20 போட்டியில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். கடந்தகால வரலாறுகளை இன்றைய போட்டி மாற்றலாம். மாற்றுமா ஐதராபாத் அணி? பொறுத்திருந்து பார்க்கலாம்.