இங்கிலாந்தில் நடந்து வரும் உலகக் கோப்பை தொடரில் ஞாயிற்றுகிழமை நடைபெற்ற போட்டியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்த ஆட்டத்தில் தோனியின் பேட்டிங்கை பலரும் விமர்சித்து வருகின்றனர். மேலும் இந்திய அணியின் தோல்விக்கு தோனியின் பேட்டிங் தான் காரணம் எனவும் சிலர் கருத்து கூறினர். இந்நிலையில் இந்த கருத்தை இந்தியாவின் துணை பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் கடுமையாக எதிர்த்துள்ளனர்.
இது குறித்து கூறியுள்ள அவர், "ஒரே ஒரு போட்டி தவிர மற்ற எல்லா போட்டிகளில் தோனி சிறப்பாகவே செயல்பட்டுள்ளார். தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில் தோனி சீராகவே செயல்பட்டார். அதுபோல வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான ஆட்டத்தில் மிக முக்கியமான நேரத்தில் அரை சதம் அடித்து இந்திய அணிக்கு உதவினார்.
அதேபோல இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியிலும் தோனி சிறப்பாகவே விளையாடினார். இந்தப் போட்டியில் இந்திய அணி கடைசி ஓவர்களில் அதிக ரன்கள் அடிக்க வேண்டிய சூழலில் இருந்ததே தோல்விக்கு முக்கிய காரணம். அதுமட்டுமல்லாமல் இங்கிலாந்து அணி நன்றாக பந்துவீசியது. கடைசி சில ஓவர்களில் அவர்கள் வீசிய பந்துகள் அடிப்பதற்கு சற்று சவாலாக இருந்தது. தோனி எப்போதும் அணிக்காகவே விளையாடுகிறார். ஆனால் சமீபத்தில் அடிக்கடி அவர் மீது இதுபோன்ற விமர்சனங்கள் எழுவது எனக்கு மிகவும் ஆச்சரியமாக உள்ளது" என் தெரிவித்துள்ளார்.