இந்தியா, மேற்கிந்திய தீவுகள் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.
ஒரிசா மாநிலத்தில் நேற்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 315 ரன்கள் எடுத்து. 316 என்ற வெற்றி இலக்குடன் விளையாட தொடங்கிய இந்திய அணியின் முன்வரிசை ஆட்டக்காரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் சிறப்பாக விளையாடிய ரோஹித் சர்மா 63 ரன்களையும், கோலி 85 ரன்களையும் குவித்தனர். இறுதியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி ஓராண்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற ஜெயசூர்யாவின் 22 ஆண்டுகால சாதனையை ரோஹித் சர்மா முறியடித்துள்ளார். 1997-ஆம் ஆண்டு இலங்கையின் சனத் ஜெயசூர்யா ஒரே ஆண்டில் 2387 ரன்கள் அடித்ததே, ஒராண்டில் தொடக்க வீரர் ஒருவர் எடுத்த அதிகபட்ச ரன்னாக இருந்தது. அதனை மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான நேற்றைய போட்டியின்போது ரோஹித் ஷர்மா முறியடித்தார். நேற்றைய போட்டியில் அவர் அடித்த 63 ரன்களையும் சேர்த்து இந்த ஆண்டில் மட்டும் ரோஹித் சர்மா 2442 ரன்களை குவித்துள்ளார்.
அதேபோல இந்த ஆண்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பட்டியலில் இந்திய கேப்டன் கோலி முதலிடத்தை பிடித்துள்ளார். இதன்மூலம் கடந்த நான்கு ஆண்டுகளாக கோலி தொடர்ந்து இந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்து புதிய சாதனையை பிடித்துள்ளார். அதேபோல நடப்பாண்டில், ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற பெருமையை முகமது ஷமி பெற்றுள்ளார். நடப்பாண்டில் 21 போட்டிகளில் விளையாடிய அவர், 42 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.