இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடர், இன்று தொடங்கியுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி, பகலிரவு ஆட்டமாக, அடிலெயிட்டில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோலி, பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தார்.
இதனைத்தொடர்ந்து தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கிய பிரித்வி ஷா, ஆட்டத்தின் இரண்டாம் பந்திலேயே போல்டு ஆனார். இன்னொரு தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால், சிறிது நேரம் போராடிவிட்டு ஆட்டமிழந்தார். அதன்பிறகு ஜோடி சேர்ந்த 'விராட் கோலி - புஜாரா' கூட்டணி நிதானமாக ஆடியது.
புஜாரா தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆஸ்திரேலியா அணியும் சிறப்பாகப் பந்து வீசியதால் ரன் எடுப்பது கடினமாகவே இருந்தது. அணியின் எண்ணிக்கை 100-ஐ தொட்டபோது, 160 பந்துகளில் 43 ரன்கள் எடுத்த புஜாரா, நாதன் லையன் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு ரஹானேவும் கோலியும் ஆஸ்திரேலியா பந்துவீச்சை சமாளித்து ரன்களைச் சேர்க்கத் தொடங்கினர்.
சிறப்பாக ஆடிவந்த கேப்டன் கோலி 180 பந்துகளை எதிர்கொண்டு 74 ரன்கள் எடுத்திருந்தபோது துரதிருஷ்ட வசமாக ரன் அவுட் ஆனார்.இதன் பிறகு 42 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ரஹானேவும், ஹனுமா விஹாரியும் ஆட்டமிழக்க, 184 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து நல்ல நிலையில் இருந்த இந்திய அணி, 206 க்கு 6 என்ற இக்கட்டான நிலையில் சிக்கியது.
முதல்நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி, 233 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. அஸ்வின் 15 ரன்களுடனும், சஹா 9 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.