Skip to main content

தோனியின் சம்பளம் குறைகிறதா? - சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த பி.சி.சி.ஐ.!

Published on 08/03/2018 | Edited on 08/03/2018

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியை விட புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு அதிக சம்பளம் கொடுக்க இருப்பதாக பி.சி.சி.ஐ. அறிவித்திருக்கிறது.

 

Dhoni

 

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவிசாஸ்த்ரி உள்ளிட்ட பலர் கிரிக்கெட் வீரர்களின் வருமானத்தை உயர்த்தக்கோரி பி.சி.சி.ஐ.யிடம் பலமுறை கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து பரிசீலனை செய்து வருவதாகக் கூறியிருந்த பி.சி.சி.ஐ., தற்போது மாற்றியமைக்கப்பட்ட அல்லது உயர்த்தப்பட்ட ஊதிய உயர்வு பட்டியலை வெளியிட்டிருக்கிறது.

 

பி.சி.சி.ஐ. வெளியிட்டுள்ள இந்தப் பட்டியலில், புதிதாக A+ என்ற பிரிவைச் சேர்த்து விராட் கோலி, ரோகித் சர்மா, சிகர் தவான், புவனேஷ்வர் குமார் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரை அதில் இணைத்திருக்கிறது. இந்த ஐவருக்கும் ரூ.7 கோடி ஆண்டு வருமானமாக வழங்கப்படும். A பிரிவில் மகேந்திர சிங் தோனி, ரவிச்சந்திரன் அஸ்வின், புஜாரா, ரஹானே, சாஹா, ஜடேஜா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களுக்கு ரூ.5 கோடி ஆண்டு வருமானமாக வழங்கப்படும். இதேபோல், B மற்றும் C பிரிவுகளைச் சேர்ந்த வீரர்களுக்கு முறையே ரூ.3 கோடி மற்றும் ரூ.1 கோடி ஆண்டு வருமானமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட இருக்கிறது.

 

Dhoni

 

இந்திய அணியை பல உச்சங்களுக்குக் கூட்டிச்சென்ற, மூத்த வீரர் தோனியை விட இளம் வீரர்கள் புவனேஷ்வர் குமார் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு அதிக வருமானம் வழங்குவதாக வெளிவந்த அறிவிப்பு தோனி ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், ‘வீரர்கள் விளையாடும் போட்டிகளின் எண்ணிக்கையைப் பொருத்தே வருமானம் நிர்ணயிக்கப் பட்டிருக்கிறது. தோனி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். எனவே, தோனியின் வருமானம் குறைந்திருக்கிறது’ என பி.சி.சி.ஐ. தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது.