Skip to main content

ஸ்மித் மற்றும் டேவிட் வார்னருக்கு கிரிக்கெட் விளையாட வாழ்நாள் தடை? 

Published on 26/03/2018 | Edited on 27/03/2018

பந்தை சேதப்படுத்திய குற்றத்திற்காக ஆஸ்திரேலிய அணியின் ஸ்மித் மற்றும் வார்னருக்கு கிரிக்கெட் விளையாட வாழ்நாள் தடை விதிக்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Smith

 

தென் ஆப்பிரிக்கா உடனான டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியில், பந்தை சேதப்படுத்திய குற்றத்திற்காக கேப்டன் ஸ்மித் மற்றும் துணை கேப்டன் டேவிட் வார்னர் ஆகியோர் பதவி விலகினர். ஸ்மித்துக்கு போட்டிக்கட்டணத்தில் இருந்து 100% மற்றும் பந்தை சேதப்படுத்திய பான்கிராஃப்ட்டுக்கு 75% அபராதமும் விதித்தது ஐசிசி. மேலும், மீதமிருக்கும் ஒரு போட்டியில் ஸ்மித் விளையாட தடை விதித்து உத்தரவிட்டது ஐசிசி.

 

இந்தத் தண்டனைகள் ஒருபுறம் இருந்தாலும், ஆஸி. கிரிக்கெட் வாரியத்தின் நடத்தை விதிகள், விதிமீறலில் ஈடுபடும் வீரர்களுக்கு கடுமையான தண்டனைகளை விதிப்பவையாக இருக்கின்றன. அதன்படி, ஆஸி. கிரிக்கெட் வாரியத்தின் ஒருங்கிணைப்புத் தலைவர் இயான் ராய் மற்றும் செயல்பாட்டு மேலாளர் பேத் ஹோவர்ட் ஆகியோர் தென் ஆப்பிரிக்கா சென்று, அங்கு ஸ்டீவன் ஸ்மித், டேவிட் வார்னர் மற்றும் பயிற்சியாளர் டேர்ரன் லெஹ்மேன் ஆகியோரிடம் விசாரணை நடத்தவுள்ளனர். இந்த விசாரணைக்கு பின்பு மிகப்பெரிய தலைகுனிவை ஏற்படுத்திய குற்றத்திற்காக ஸ்மித் மற்றும் வார்னருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் ஆஷஸ் நேஹ்ரா, ‘தவறை ஒப்புக்கொண்டதற்காக நீங்கள் அவர்களைப் பாராட்டவேண்டும். அவர்களுக்கு போதுமான தண்டனை வழங்கப்பட்டு விட்ட நிலையில், வாழ்நாள் தடை என்பது மிகமோசமான தண்டனையாக அமையும். அதை எந்த வீரருக்கும் வழங்கக்கூடாது’ என வேண்டுகோள் விடுத்துள்ளார்.