ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்த 70 ரன் இலக்கை 2 விக்கெட் மட்டுமே இழந்து எட்டியது இந்தியா. பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் முதல் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 195 & 200, இந்திய அணி 326 & 70/2 ரன்கள் எடுத்தனர்.
அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட மோசமான தோல்விக்கு இந்திய அணி பழிதீர்த்தது. நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் 1-1 என இரு அணிகளும் சமநிலையில் உள்ளன. இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ஜனவரி 7- ஆம் தேதி சிட்னியில் தொடங்குகிறது.
கேப்டன் விராட் கோலி இல்லாத நிலையில் முதல் இன்னிங்ஸில் சதமடித்த பொறுப்பு கேப்டன் ரஹானே இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார். முதல் போட்டியில் களமிறங்கிய இந்திய வீரர்கள் ஷுப்மன் கில், முகமது சிராஜ் சிறப்பாக செயல்பட்டனர். ஷுப்மன் கில் இரு இன்னிங்ஸிலும் முறையே 45, 35 ரன்கள்; சிராஜ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
மெல்போர்னில் பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பெற்ற இரண்டாவது வெற்றி இதுவாகும். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இதுவரை 8 பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் பங்கேற்றுள்ள இந்தியா இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 8 போட்டிகளில் 5 தோல்வியும், ஒரு போட்டி டிராவிலும் முடிந்த நிலையில் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
2018- ஆம் ஆண்டு விராட் கோலி தலைமையிலான இந்திய அணி முதல்முறையாக பாக்சிங் டே போட்டியில் வென்றது குறிப்பிடத்தக்கது.