![IND Vs PAK: Anything can happen!](http://image.nakkheeran.in/cdn/farfuture/earDeCzvvWV-z4zFAZmh19jPqDqHS4MC-m_iuW36RWQ/1697275197/sites/default/files/inline-images/th-4_294.jpg)
உலகக் கோப்பை கிரிக்கெட் 2023ன், 12வது லீக் ஆட்டம் இன்று குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. இந்த போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இது வரை இரு அணிகளும் உலகக் கோப்பை போட்டியில் ஏழு முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இந்த ஏழு போட்டியிலும் இந்திய அணியே வெற்றி பெற்றுள்ளது.
இந்த வரலாற்றை மாற்ற பாபர் அஸாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும், வரலாற்றை தக்க வைக்க ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணியும் முனைப்பு காட்டி வருகிறது.
இந்தப் போட்டிக்காக முன்னதாக பாகிஸ்தான் அணி வீரர்கள் மைதானத்திற்கு வந்த போது, பாகிஸ்தானின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ஷாகின் அஃப்ரிடியிடம் சிலர் செல்ஃபி கேட்டனர். அதற்கு அவர், “இந்தியாவுக்கு எதிரான இந்தப் போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்திய பிறகு நிச்சயம் உங்களுடன் செல்ஃபி எடுத்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துவிட்டு சென்றார்.
![IND Vs PAK: Anything can happen!](http://image.nakkheeran.in/cdn/farfuture/-cmvZmAHA2gEeMw-l_DljG-GZMcgF2d6b9hhIeDcxC4/1697275214/sites/default/files/inline-images/th-1_4288.jpg)
அதேபோல், பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அஸாம், “கடந்த காலத்தை நினைக்க வேண்டியதில்லை. வருங்காலத்தின் மீது நம்பிக்கை வைப்போம். தொடர் வெற்றிகள் எல்லாமே ஒரு நாள் முறியடிக்கப்படும். இன்று என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். முதல் மூன்று போட்டிகளில் எங்களின் அணி சிறப்பாக விளையாடியுள்ளது. இதே நிலை இனிவரும் போட்டிகளிலும் தொடரும்” எனத் தெரிவித்திருக்கிறார்.
நரேந்திர மோடி மைதானம் ஸ்லோ விக்கெட் என்பதால் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு களம் பலமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. அதேபோல், இந்த மைதானத்தில் சேஸிங் எடுத்தால் வெற்றி வாய்ப்பு அதிகம் என்றும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
![IND Vs PAK: Anything can happen!](http://image.nakkheeran.in/cdn/farfuture/Vn8_J1Mmstys_h9UcDfWjlB5Ky6RlFPmduWK7WyrEaI/1697275227/sites/default/files/inline-images/th-4_295.jpg)
இந்த உலகக்கோப்பையின் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து பங்குபெற்ற முதல் ஆட்டத்தில் ரசிகர்கள் கூட்டம் இல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டது. இந்நிலையில் இந்திய பாகிஸ்தான் போட்டிக்கு அனைத்து விக்கெட்டுகளும் விற்று தீர்ந்ததால் உலகக்கோப்பை போட்டிகள் விறுவிறுப்பு அடைந்துள்ளது.
இந்திய அணியில் முக்கிய மாற்றமாக இஷானுக்கு பதில் டெங்குவால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்த கில், அணிக்கு திரும்பி உள்ளார்.
பாகிஸ்தான் வீரர்களின் கருத்துகளும், இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளதும் போட்டியில் இன்னும் அனலை கிளப்பியுள்ளது.