உலகக்கோப்பை போட்டிகளுக்கு முன்னர் இன்னும் ஒரு தொடர் மட்டுமே உள்ள நிலையில் இந்திய அணியின் காம்பினேஷன் பற்றி முன்னாள் வீரர்களும், கிரிக்கெட் விமர்சகர்களும் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்திய அணியின் உலகக்கோப்பை போட்டிகளுக்கான பேட்டிங் காம்பினேஷன் தொடர்பாக அணியின் புதுமையான அதிரடி பிளான் பற்றி பேசியுள்ளார் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி.
2011-ம் ஆண்டு உலகக்கோப்பை போட்டிகளின்போது விராட் கோலி, யுவராஜ், தோனி, ரெய்னா என இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் மாஸ் காட்டியது. 8 ஆண்டுகளில் பல மாற்றங்களை சந்தித்துவிட்டது மிடில் ஆர்டர். உலகின் தலைசிறந்த டாப் ஆர்டர் (டாப் 3), மாஸ் காட்டும் ஸ்பின் பவுலிங், மிரட்டும் ஃபாஸ்ட் பவுலிங் என பலமுடன் உள்ள இந்திய அணிக்கு மிடில் ஆர்டர் பேட்டிங் பெரிய சோதனையாகவே உள்ளது.
10 வீரர்களுக்கு மேல் 4 முதல் 6 வரையிலான இடங்களில் கடைசி நான்கு வருடங்களில் களமிறங்கியுள்ளனர். ஆனால் தோனியை தவிர வேறு யாரும் இன்னும் மிடில் ஆர்டர் பேட்டிங்கில் தன்னுடைய இடத்தை உறுதி செய்யவில்லை. கடைசி சில தொடர்களாக அம்பதி ராயுடு, தினேஷ் கார்த்திக், கேதர் ஜாதவ் ஆகியோர் அந்த இடங்களில் விளையாடி வருகின்றனர். இந்த மூவரும் சில சமயம் சொதப்புகின்றனர். சில சமயம் சிறப்பாக ஆடுகின்றனர். ஆட்டத்தில் நல்ல நிலைத்தன்மையை இன்னும் அடையவில்லை.
மிடில் ஆர்டர் பேட்டிங்கை பலப்படுத்த சூழ்நிலைக்கு தகுந்தவாறு சில சமயங்களில் கோலி நம்பர் 4-ல் களமிறங்குவார் என ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். அம்பதி ராயுடு அல்லது வேறு ஒருவர் அந்த நேரங்களில் 3-வது இடத்தில் பேட்டிங் செய்வார்கள். இது மிடில் ஆர்டர் பேட்டிங்கை வலிமைப்படுத்தும்.
18 ரன்களுக்கு 3 விக்கெட்கள் அல்லது 16 ரன்களுக்கு 4 விக்கெட்கள் போன்ற மிகவும் இக்கட்டான சூழ்நிலையை உலகக்கோப்பை போன்ற மிகப்பெரிய தொடர்களில் சந்திக்க விரும்பவில்லை. பவுலருக்கு சாதகமாக உள்ள மைதானங்களில் அணியின் சிறந்த பேட்ஸ்மேனை(கோலியை) விரைவாக இழப்பது அணிக்கு நன்மை பயக்காது. எனவே மைதானத்தின் தன்மை, அணியின் பேட்டிங் சூழ்நிலை ஆகியவற்றை பொறுத்து விராட் கோலி களமிறங்கும் இடம் தீர்மானிக்கப்படும் என்று சாஸ்திரி கூறியுள்ளார்.
அனில் கும்ப்ளே தோனியை நம்பர் 4-ஆக களமிறங்க வேண்டும் என்று கருத்து கூறியுள்ளார். அனுபவம், சூழ்நிலைக்கு தகுந்தவாறு தனது பேட்டிங்கை மாற்றிக்கொள்ளும் திறன், மிடில் ஆர்டர் பேட்டிங்கை கன்ட்ரோல் செய்யும் ஸ்கில் உள்ளிட்ட சிறப்பம்சங்களால் நான்காவது இடத்தில் விளையாட தோனிதான் சிறந்த வீரர் என கும்ப்ளே தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து தொடரில் தோனியின் ஆட்டம் சற்று நம்பிக்கையை கொடுத்துள்ளது. ஆனால் லோயர் ஆர்டரில் ஆடும் ஸ்பின் பவுலர்கள், ஃபாஸ்ட் பவுலர்களில் புவனேஷ் குமார் தவிர வேறு யாரும் பங்களிப்பதில்லை. பேட்ஸ்மேன்களில் கேதர் ஜாதவ் மட்டுமே அவ்வப்போது பார்ட் டைம் பவுலராக விளையாடுகிறார். மற்ற பேட்ஸ்மேன்கள் பந்து வீசுவதில்லை. இது அணியின் மைனஸாக உள்ளது. ஹர்திக் பாண்டியாவின் ஆல்-ரவுண்டர் செயல்பாடு திருப்திகரமாக உள்ளது.
ரோகித், தவான், கோலி, ராயுடு, தோனி, கார்த்திக், ஜாதவ், ஹர்திக், புவனேஷ், பும்ரா, ஷமி, குல்தீப், சஹால் ஆகியோர் அணியில் உறுதியாக இடம் பெறுவார்கள் எனவும், ராகுல், பண்ட், ஜடேஜா, கலீல், உமேஷ், ஷுப்மான் கில், விஜய் ஷங்கர் ஆகியோரில் இருவர் மீதமுள்ள இடங்களை பிடிப்பார்கள் எனவும் முகமது கைப் தெரிவித்துள்ளார்.