ஆஸ்திரேலியத் தொடருக்கான அணித் தேர்வு குறித்து, பி.சி.சி.ஐ மீது இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தன்னுடைய அதிருப்தியை காட்டமாக வெளிப்படுத்தியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி இந்த ஆண்டின் இறுதியில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 4 டெஸ்ட், 3 இருபது ஓவர் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இத்தொடரில் பங்கேற்கும் வீரர்கள் குறித்தான அறிவிப்பு நேற்று வெளியானது. இவ்வீரர்கள் தேர்வு குறித்து தற்போது பலரும் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங், மும்பை அணியைச் சேர்ந்த இளம் வீரர் சூர்யகுமார் யாதவை அணியில் தேர்வு செய்யாதது குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில், "இந்திய அணியில் இடம் கிடைக்க சூர்யகுமார் யாதவ் இன்னும் என்ன செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை. ஒவ்வொரு ஐ.பி.எல் மற்றும் ரஞ்சி தொடர்களிலும் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஒவ்வொரு வீரருக்கும் ஒவ்வொரு வகையிலான விதிமுறைகள் இருக்கிறது என்று நினைக்கிறேன். அணித் தேர்வாளர்கள் சூர்யகுமார் யாதவ் சாதனைகளை எடுத்துப் பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.
நடப்பு ஐ.பி.எல் தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் முகமது சிராஜ் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.