கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி பிசிசிஐ அண்மையில் வீடியோ ஒன்றை வெளியிட்டது. இந்த வீடியோ தற்போது தோனி ரசிகர்களிடையே வருத்தத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் சூழலில், இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மக்கள் வெளியில் செல்லும்போது மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும் என மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இந்த சூழலில், இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிசிசிஐ தரப்பில், கடந்த சனிக்கிழமை வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது. இதில் இந்திய அணியின் முன்னணி வீரர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் உள்ளிட்டோர் தோன்றி முகக்கவசத்தின் அவசியத்தை மக்களுக்கு எடுத்துரைத்தனர். இந்த வீடியோவில் இந்திய அணி கேப்டனான கோலி தொடங்கி முன்னாள் கேப்டன்களான கங்குலி, டிராவிட், சச்சின் ஆகியோரும் மித்தாலி ராஜ், ஹர்மன் பிரித் கவுர், ஸ்மிருதி மந்தானா ஆகியோரும் இடம் பெற்றிருந்தனர். ஆனால் இந்த வீடியோவில் தோனி இடம்பெறாதது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தோனி அண்மை காலமாக கிரிக்கெட்டிலிருந்து ஒதுங்கியிருக்கும் நிலையில், ஐபிஎல் போட்டிகளில் அவரை காணலாம் என ஆயிரக்கணக்கான ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால் ஐபிஎல் தொடர் கரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிசிசிஐ வெளியிட்டுள்ள இந்த வீடியோவில் தோனி இல்லாதது குறித்து அவரது ரசிகர்கள் பிசிசிஐ சமூகவலைத்தள பக்கங்களில் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருவதோடு, தோனி எங்கே? எனவும் கேள்வியும் எழுப்பி வருகின்றனர்.
#TeamIndia is now #TeamMaskForce!
— BCCI (@BCCI) April 18, 2020
Join #IndiaFightsCorona and download @mygovindia's @SetuAarogya mobile application ?@PMOIndia @narendramodi ?? pic.twitter.com/M06okJhegt