ஐபிஎல் 2018 இன் 24வது போட்டியில் கேப்டன் அமைதி Vs கேப்டன் ஆக்ரோஷம் இருவரும் பயங்கர எதிர்பார்ப்புகளிடையே மோதிக்கொண்டனர். எதிர்பார்ப்புக்கேற்றாற்போல் போட்டி அனல் பறக்க இருந்தது.
டாஸ் வென்ற தோனி முதலில் பௌலிங் செய்யப் போவதாக அறிவித்தார். முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் 205 குவித்தது. வழக்கம்போல மிஸ்டர் 360 டிகிரி AB டிவிலியர்ஸ், 30 பந்துகளில் 68 ரன்களை நொறுக்கினார். இவருக்குத் துணையாக டிகாக் மற்றும் மந்தீப் சிறப்பாக ரன்கள் குவிக்க உதவினர். ஆனால் கோலி 18 ரன்களுடன் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். இம்ரான் தாஹிர் சிறப்பாக பந்து வீசி ABD மற்றும் ஆண்டர்சன் ஆகியோரை அடுத்ததடுத்த பந்துகளில் அவுட் செய்து ரன் வேகத்தைக் கட்டுப்படுத்த உதவினார்.
AB டிவிலியர்ஸ்
பெங்களூருல போட்டி நடந்தாலும் இரு அணிகளுக்கும் சமமான ஆதரவுக் குரல் மைதானத்தில் ஒலித்தது. 206 என்ற கடினமான இலக்கை நோக்கி களம் இறங்கிய சென்னை அணிக்கு ஆரம்பம் படு மோசமாக இருந்தது. அதிரடி மன்னர்கள் வாட்சன், ரெய்னா, பில்லிங்ஸ் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். ஜடேஜாவிற்கு பேட்டிங் செய்து பார்ம்க்கு வரக் கூடிய சூழல் இருந்தும் அதைத் தவற விட்டு சென்னை அணியை இக்கட்டான நிலையில் மேலும் தள்ளிவிட்டுச் சென்றார். பின்பு களம் இறங்கிய கேப்டன் அமைதி தோனி, ராயுடுவுடன் சேர்ந்து ஆக்ரோஷமாக விளையாடினார். இருவரும் நாலாபுறமும் விளாசிய சிக்ஸர்கள் மூலம் தேவைக்கு ஏற்ப ரன்களை குவித்தனர்.
கடைசி 5 ஓவரில் 71 ரன்கள் தேவை. அப்போது எதிர்பாராத நேரத்தில் ராயுடுவின் ரன் அவுட் ஆட்டத்தை பரபரப்பின் உச்சிக்கு எடுத்துச் சென்றது. வேறு அணியாக இருந்தால் சந்தேகம் ஏற்பட்டிருக்கும். ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் என்பதால் நம்பிக்கையோடு போட்டியை ரசித்தனர் சென்னை ரசிகர்கள். நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையில் 'தல' தோனி தன் வழக்கமான ஸ்டைலில் சிக்ஸர் அடித்து ஆட்டத்தை வெற்றி பெற செய்தார்.
ராயுடு, தடம் மாறிச் சென்று கொண்டிருந்த சென்னை அணியின் ஆட்டத்தை 83 ரன்கள் குவித்ததன் மூலம் மீண்டும் வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்தார். மேலும் தொடர்ந்து சிறப்பாக பேட்டிங் செய்து வரும் ராயுடு ஐபில் 2018இல் அதிக ரன்கள் குவித்த வீரரானார். அவருக்கு ஆரஞ்சு தொப்பி வழங்கப்பட்டது. சில காலமாக சுமாராக விளையாடி வந்த தோனி இப்படி சூறாவளியாக விளையாடியது சென்னை ரசிகர்களுக்கு மட்டுமல்ல இந்திய ரசிகர்களுக்கும் ரொம்ப சந்தோசம். அனைத்து விமர்சனங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்து ஆட்டநாயகன் விருதையும் பெற்றார். இந்த வெற்றியின் மூலம் சென்னை மீண்டும் புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடித்தது.
ராயுடு
பாவம் கோலி, எவ்வளவு தான் ரன்கள் அடிச்சாலும், அந்த அணியின் பௌலிங் மொத்தமா சொதப்பி தோல்வியடையுறாங்க. இதற்கு மேல கோலி, ABD தான் பௌலிங் போடணும் போல. பேட்டிங்ல வழுவா இருக்கும் பெங்களூரு அணி, பௌலிங்கை கண்டிப்பா பரிசீலனை செய்தாக வேண்டும்.
அவங்க எப்படி பௌலிங் பண்ணுனா நமக்கு என்ன? நமக்கு சென்னை செம்மையாக வெற்றி பெற்றது. குமுதா ஹாப்பி அண்ணாச்சி!