இனி “சி.எஸ்.கே. சி.எஸ்.கே.” என்னும் மந்திரச் சொற்களும், “தோனி... தோனி...”, “ரெய்னா... ரெய்னா...” என்ற கோஷங்களும் மைதானங்களை ஆக்கிரமிக்கும். ரெய்னாவின் அதிரடி பேட்டிங், தோனியின் ஷாட்ஸ் மற்றும் கேப்டன்ஷிப், பிராவோவின் ஆல்-ரவுண்ட் ஸ்கில், டூ பிளசிஸ் மற்றும் ஜடேஜாவின் டைவ் பீல்டிங் என சிஎஸ்கே வீரர்களும் உற்சாகத்தின் மிகுதியில் உள்ள ரசிகர்களை இன்னும் அமர்களப்படுத்துவார்கள்.
சிஎஸ்கே அணிக்கு உள்ள ஆதரவும், எதிர்பார்ப்பும் மற்ற உள்ளூர் டி20 அணிக்கும் இருக்குமா என்பது சந்தேகம்தான். அந்தளவுக்கு உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை தன் பக்கம் வைத்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. சென்ற வருடம் வயது முக்கியமல்ல, பிட்னஸ் தான் முக்கியம் என்ற கொள்கையுடன் ஏலத்தில் ஆச்சரியம் கொடுத்து, களத்திலும் சாதித்து கோப்பையை வென்றது.
வரும் 23-ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் 12-வது ஐபிஎல் போட்டிகள் தொடங்கவுள்ளன. இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் தீவிரமான சென்னை சேப்பாக்கத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பயிற்சியில் தல தோனி சிக்ஸர் அடிக்கும் ஷாட்களை சிஎஸ்கே அணி நிர்வாகம் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது.
சிஎஸ்கே 4-வது முறையாக கோப்பையை வெல்லும் நம்பிக்கையுடன் இருக்கிறது. சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங், பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசி, பவுலிங் பயிற்சியாளர் பாலாஜி என பயிற்சியாளர் யூனிட்டும் பலம் பெற்றுள்ளது.
மூன்று முறை சாம்பியன், நான்கு முறை இறுதிப்போட்டி என மிகச்சிறந்த அணியாக சிஎஸ்கே ஐ.பி.எல்.லில் உள்ளது. 2 வருட தடைக்கு பிறகு மாஸ் கம்பேக் தந்து கோப்பையை வென்றது. இந்த ஆண்டு ஏலத்தில் மோகித் சர்மா (5 கோடி), ருதுராஜ் கெய்க்வாட் (ரூ.20 லட்சம்) ஆகியோரை எடுத்தது.
ரெய்னா, தோனி, முரளி விஜய், ராயுடு, கேதர் ஜாதவ், ஷேன் வாட்ஸன், சாம் பில்லிங்ஸ், டூ பிளசிஸ் என மிரட்டும் பேட்டிங் வரிசையை கொண்டுள்ளது. பேட்டிங்கை பொறுத்தவரை ஒப்பனிங், மிடில் ஆர்டர், லோவர் மிடில் ஆர்டர் என அனைத்தும் வலுவாக உள்ளது. மேலும் பல பேட்ஸ்மேன்கள் எந்த பொசிசனிலும் களமிறங்கி அசத்தும் திறமை உடையவர்கள்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் செல்லப்பிள்ளை ரெய்னா மற்றும் நட்சத்திர வீரர் பிராவோ சென்னை அணிக்கு பேட்டிங், பவுலிங், பீல்டிங் என மூன்றிலும் பங்களிக்க தயாராக உள்ளனர். ஸ்லிப் மற்றும் பாயிண்ட்டில் கேட்ச், லாங் பீல்டிங்கில் டைவ் கேட்ச், கிரவுண்ட் பீல்டிங் மூலம் ரன்களை தடுத்தல் என ரெய்னா, ஜடேஜா, பிராவோ, டூ பிளசிஸ் ஆகியோரின் பீல்டிங் யூனிட் பிரமிக்க வைக்கிறது.
ரவிந்திர ஜடேஜா, கேதர் ஜாதவ், பிராவோ, ஷேன் வாட்ஸன், மிட்ஷெல் சான்ட்னர் ஆகிய ஆல்ரவுண்டர்கள் அணிக்கு பலம் சேர்க்கின்றனர். ஃபாஸ்ட் பவுலிங் பொறுத்தவரை லுங்கி இங்கிடி, ஷர்துல் தாக்கூர் மற்றும் மோகித் சர்மா ஆகியோரை தவிர பெரிதாக அனுபவம் உடைய பவுலர்கள் இல்லை. இம்ரான் தாஹிர், கரன் சர்மா, ஹர்பஜன் சிங் ஆகிய அனுபவம் வாய்ந்த ஸ்பின்னர்கள் அணிக்கு கூடுதல் பலம்.
கடந்த ஆண்டு கேதர் ஜாதவ் முதல் போட்டியிலேயே காயம் காரணமாக தொடரிலிருந்து வெளியேறினார். மிட்ஷெல் சான்ட்னர் காயம் காரணமாக தொடருக்கு முன்பே விலகினார். இந்த முறை இருவரும் அணியில் இணைந்திருப்பது கூடுதல் பலம்.
டெத் பவுலிங்கில் இங்கிடி, பிராவோ தவிர யாரும் அனுபவம் வாய்ந்தவர்கள் இல்லை. மொத்தம் உள்ள 25 வீரர்களில் சிஎஸ்கே அணியில் 17 வீரர்கள் இந்திய வீரர்கள், 8 வெளிநாட்டு வீரர்கள் உள்ளனர்.
சிஎஸ்கே 2.0 பலம்:
வலுவான இடைநிலை ஆட்டக்காரர்கள்
மிரட்டலான சுழல் பந்துவீச்சு
மீடியம் ஃபாஸ்ட் மற்றும் ஸ்பின் ஆல்ரவுண்டர்கள்
சிஎஸ்கே 2.0 பலவீனம்:
அனுபவமில்லாத வேகப்பந்துவீச்சு துறை
ஸ்பெஷலிஸ்ட் ஓப்பனர் இல்லாதது
டெத் பவுலிங்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பட்டியல்:
தோனி(கேப்டன்), சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, கேதர் ஜாதவ், முரளி விஜய், ரவிந்திர ஜடேஜா, ஹர்பஜன் சிங், மோகித் சர்மா, பிராவோ, ஷேன் வாட்ஸன், டூ பிளசிஸ், சாம் பில்லிங்ஸ், இம்ரான் தாஹிர், மிட்ஷெல் சான்ட்னர், லுங்கி இங்கிடி, கரன் சர்மா, டேவிட் வில்லே, தீபக் சாஹர், ஷர்துல் தாக்கூர், ருதுராஜ் கெய்க்வாட், நாராயன் ஜெகதீஸன், கேஎம் ஆசிப், துருவ் ஷோரே, மோனு குமார், பிஷ்னோய்.