Skip to main content

பஞ்சாபை சோதிக்குமா பவர்ஃபுல் பெங்களூரு அணி? ஐ.பி.எல். போட்டி #8

Published on 13/04/2018 | Edited on 13/04/2018

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் எட்டாவது போட்டி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும் இடையே நடைபெறவுள்ளது. 

 

 

இந்தப் போட்டி பெங்களூருவில் உள்ள எம்.சின்னச்சாமி மைதானத்தில் வைத்து இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இதுவரை நடந்துள்ள ஏழு போட்டிகளில், இந்த இரண்டு அணிகள் மட்டுமே தலா ஒரு போட்டியில் விளையாடியுள்ள நிலையில், இன்று களம் காண்கின்றன.

 

பெங்களூரு அணியைப் பொருத்தவரை பலகாலமாக ‘பேட்டிங் ஸ்டார்ங்கு, பவுலிங் மட்டும் கொஞ்சம் வீக்கு..’ என்ற நிலையை மாற்றி, வெறும் 49 ரன்களுக்குள் சுருண்டு போவதற்குக் காரணமாக இருந்த கொல்கத்தா அணியின் நான்கு பவுலர்களையும் ஏலத்தில் எடுத்தது. ஆனால், அந்த அதீத நம்பிக்கை முதல் போட்டியில் பொய்த்துப்போனது. கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியுடனான அந்த போட்டியில் பகுதிநேர பவுலரான நிதிஷ் ரானாவிடம் அவுட் ஆகினர் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர்கள் டிவில்லியர்ஸும், கோலியும். அந்தப் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றிபெற்றது.

 

இது இப்படியிருக்க பஞ்சாப் அணியின் தொடக்கமே படுபயங்கரமாக இருந்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல், வெறும் 14 பந்துகளில் அரைசதம் அடித்து ஐபிஎல் வரலாற்றிலேயே அதிவேக அரைசதம் என்ற சாதனை படைத்தார். அதோடு சேர்ந்து கருண் நாயரும் அரைசதம் விளாச, மிக எளிதாகவே வெற்றியைப் பதிவுசெய்தனர்.

 

இன்று நடக்கும் போட்டியில் பெங்களூரு அணி தனது சொந்த மண்ணில் களமிறங்குகிறது. மிகத்திறமையான, வலிமையான அணியைக் கைவசம் வைத்திருக்கும் அந்த அணிக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. அதேசமயம், முதல் போட்டியில் மிகச்சாதாரணமாக வெற்றிபெற்ற பஞ்சாப் அணியையும் குறைத்து மதிப்பிடக்கூடாது. அதுமட்டுமின்றி, சாதரணமாக 200 ரன்களை பதிவு செய்யக்கூடிய பெங்களூரு மைதானம் என்பதால், இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்பிற்கு பஞ்சமிருக்காது என்றே நம்பலாம்.