உலகக்கோப்பை இறுதிப்போட்டி நாளை நடைபெற இருக்கிறது. பல கேள்விகளோடு பிரபல விளையாட்டுத் துறை பத்திரிகையாளரும் கிரிக்கெட் விமர்சகருமான ஆர்.கே எனும் ராதாகிருஷ்ணனிடம் பேசினோம். அவரது விரிவான பதில்கள்...
இந்த உலகக்கோப்பை தொடரில் வெற்றிக்கு டாஸ் முக்கிய பங்காற்றியிருக்கிறது. சமீபமாகவே லார்ட்ஸ் மைதானம் சேஸிங்கிற்கு உகந்ததாக இல்லை. அந்த வகையில் நாளைய போட்டியில் டாஸ் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது?
செமி ஃபைனல் பொறுத்தவரை டாஸ் ஒரு முக்கிய பங்காற்றியிருக்கிறதா என்று என்னை கேட்டால் இல்லை என்றுதான் சொல்லுவேன். நடந்த இரண்டு செமியையும் பாருங்கள். முதலில் நியூசிலாந்து அணி டாஸ் ஜெயித்து, பேட்டிங் ஆடியது. பெரியளவில் ஸ்கோர் செய்யவில்லை. டாஸை வெற்றிபெற்று நீங்கள் 300 ரன்களுக்கு மேல் அடித்துவிட்டால் அடுத்து சேஸ் செய்பவர்களுக்கு ஒரு பிரஸ்ஸராக இருக்கும். அதே சமயத்தில் ஆஸ்திரேலியா இங்கிலாந்து செமியை பாருங்கள். ஆஸ்திரேலியா டாஸை ஜெயித்து முதலில் பேட்டிங் ஆடினார்கள். நியூசிலாந்தை போலதான் ஆஸ்திரேலியாவும் லெந்த் பவுலிங்கிற்கு திணறினார்கள். அதனால் டாஸ் ஒரு முக்கிய விஷயம் இல்லை.
இறுதிப்போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் ஆடுவதன் மூலம், இந்த முறை உலகக்கோப்பையை ஒரு புதிய அணிதான் வெல்லப்போகிறது. கிரிக்கெட் விமர்சகராக இதுகுறித்து உங்களுடைய கருத்து?
எனக்கு நியூசிலாந்து அல்லது இங்கிலாந்து யார் உலகக்கோப்பையை பெற்றாலும் சந்தோசம்தான். ஏன் என்றால் ஒரு ஸ்போர்ட் வளரவேண்டும் என்றால் அந்த நாடு உலகக்கோப்பை பெற்றிருந்தால் அதன் பின் தானாகவே வளரும். அப்படிதான் இந்தியாவில் கிரிக்கெட் வளர்ந்தது. 1983ஆம் ஆண்டில் இந்தியா உலகக்கோப்பை பெற்றபின் கிரிக்கெட் இந்தியாவில் வேறு ஒரு லெவலில் வளர்ச்சியடைந்தது. அதனையடுத்து நிறைய போட்டிகளில் வெற்றிபெற தொடங்கியது. மிகப்பெரிய திருப்புமுனையாக இருந்தது என்றே சொல்லலாம். உதாரணத்திற்கு பார்த்தால், இங்கிலாந்தில் கால்பந்துதான் மிகப்பெரிய ஸ்போர்ட். அதே சமயத்தில் நியூசிலாந்தை எடுத்துக்கொண்டால் ரக்பிதான் நம்பர் ஒன் ஸ்போர்ட். அதெல்லாம் தாண்டிதான் அவர்கள் கிரிக்கெட் ஃபாலோ செய்கிறார்கள். பாம்பே அளவிலான ஒரு நாடு, குறைந்த அளவிலான மக்கள் கொண்ட ஒரு நாடு இருமுறை உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு வருகிறது என்றால் மிகப்பெரிய விஷயம். ஒரு அணி உலகக்கோப்பையை ஜெயித்தார்கள் என்றால் அடுத்த செட் தலைமுறையினர் அதை பின் தொடர்வார்கள். உலகக்கோப்பை ஜெயிப்பது என்பது ஒரு நாட்டிற்கு மிகவும் முக்கியமான ஒன்று.
இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய இரண்டு அணிகளுமே இந்த உலகக்கோப்பையில் லார்ட்ஸ் மைதானத்தில் தோல்வியை தழுவியுள்ளன. இந்நிலையில் இறுதிப்போட்டியில் விளையாடும் இவ்விரு அணி வீரர்களின் மனநிலை, வியூகங்கள் எப்படி இருக்கும்?
இது இறுதிப்போட்டி என்பதால் முன்பு அவர்கள் அந்த மைதானத்தில் எப்படி ஆடியிருக்கிறார்கள் என்பதெல்லாம் கனக்கு கிடையாது. இறுதிப்போட்டி என்பது அந்த நாள் அவர்கள் எவ்வளவு சிறப்பாக ஆடினார்கள் என்பதில்தான் இருக்கிறது. டாஸ் முதலில் ஜெயித்து, நல்ல ஸ்கோரை செட் செய்து, அடுத்து விளையாட வரும் அணிக்கு ஒரு பிரஸ்ஸரை கொடுக்க முடியும் என்று சொல்கிறார்கள். அது கண்டிப்பாக இந்த உலகக்கோப்பைக்கு பொருந்தும். ஆனால், 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை பார்த்தோம் என்றால் இலங்கை டாஸை ஜெயித்து, முதலில் பேட்டிங் ஆடியது. ஆனால், அடுத்த விளையாடிய இந்திய அணி எளிதாக ரன்களை கடந்து வெற்றிபெற்றது. 2015ஆம் ஆண்டு உலகக்கோப்பையிலும் நியூசிலாந்து அணி டாஸை வென்று பேட்டிங் தேர்வு செய்து, பேட்டிங்கில் திணறினர். ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சு அவ்வளவு சிறப்பாக இருந்தது. இதனால் டாஸ் ஜெயித்த அணி கடந்த இரண்டு உலகக்கோப்பையில் வெற்றிபெறவில்லை. இதனால் டாஸ் என்பது ஒரு பெரிய விஷயமாக இருக்காது.
இறுதிப்போட்டியில் இரு அணிகளுக்கும் கீ பிளேயர்களாக யார் யார் இருப்பார்கள்?
இந்த இரண்டு அணிகளிலும் இருந்து கீ பிளேயர்களை பிக் செய்வது மிகவும் கஷ்டமான ஒரு விஷயம். ஆனால், கண்டிப்பாக தேர்வு செய்தே தீர வேண்டும் என்றால் என்னுடைய பிக் நியூசி அணியில் இருந்து ட்ரெண்ட் பவுல்ட், இங்கிலாந்து அணியில் இருந்து ஜோ ரூட். ஏன் ஒரு பக்கத்திலிருந்து பவுலர், மற்றொரு பக்கத்திலிருந்து பேட்ஸ்மேன் என்று கேட்டீர்கள் என்றால் இங்கிலாந்து டீமை உடைக்க வேண்டும் என்றால் முதலில் அவர்களுடைய பேட்டிங் ஆர்டரை உடைக்க வேண்டும் அதற்கான திறமை ட்ரெண்ட் பவுல்ட்டிடம்தான் இருக்கிறது. லார்ட்ஸ் மைதானத்தில் சின்னதாக ஒரு ஸ்லோப் இருக்கிறது. இதற்கு முன்பாக இடது கை பந்து வீச்சாளரான ஸ்டார்க்கின் பந்து வீச்சை நாம் அங்கு பார்த்திருக்கிறோம். ஸ்டார்க்கை விட இன் ஸ்விங்க் அதிகமாக போடக்கூடிய ஒரு வீரர் ட்ரெண்ட் பவுல்ட். அதேபோல இங்கிலாந்தில் பேட்ஸ்மேன்கள் அனைவரும் அதிரடி ஆட்டக்காரர்களாக இருக்க நின்று நிதானமாக ஆடக்கூடிய ஒருவர்தான் ஜோ ரூட். அதேசமயத்தில் நல்ல பிரிஸ்க்காகவும் ஆடக்கூடியவர்.
இந்த உலகக்கோப்பை தோல்விகளுக்கு பிறகு இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்ரிக்கா போன்ற அணிகளில் என்ன மாதிரியான மாறுதல்களை நாம் எதிர்பார்க்கலாம்?
உலகக்கோப்பைக்கு பின் சில மாறுதல் சில அணிகளில் நடைபெறும். நீங்கள் இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்ரிக்கா உள்ளிட்ட அணிகளில் என்ன மாறுதல்கள் ஏற்படும் என்று கேட்டிருக்கிறீர்கள். இந்த மூன்று அணிகளுக்கும் வித்தியாசமான பிரச்சனைகள் இருந்திருக்கிறது. இந்தியா பொருத்தவரை நிறைய இளம் வீரர்கள் இருக்கிறார்கள். அடுத்த தலைமுறையினர் வந்து விளையாட ஒரு நல்ல வாய்ப்பு இது. நான்காம் இடத்தில் ஸ்ரேயாஸ் ஐயரை விளையாட வைக்கலாம். சுப்ம கில்லுக்கு நிறைய வாய்ப்புகள் கொடுக்கலாம். அடுத்த உலகக்கோப்பையை டார்கெட் செய்து இனி செலக்ட் செய்வார்கள் என்று நினைக்கிறேன். ஆஸ்திரேலியா செமி ஃபைனல் விளையாடுவார்கள் என்று எட்டு மாதத்திற்கு முன்புவரை யாரும் நம்பியிருக்க மாட்டார்கள். ஜஸ்டீன் லாங்கர் அருமையான ஒரு விஷயம் செய்திருக்கிறார். இந்த டீமை இவ்வளவு தூரம், இவ்வளவு சீக்கிரம் கொண்டு வந்திருக்கிறார். இறுதிப்போட்டிவரை அவர்கள் விளையாடவில்லை என்றாலும் ஆஸ்திரேலிய அணி நல்ல பெர்பாமன்ஸை கொடுத்திருக்கிறார்கள்.
தென்னாப்பிரிக்காவுக்கு இப்போ மட்டுமல்ல, முன்பிலிருந்தே நிலையான ஒரு பிரச்சனை இருந்துக்கொண்டே இருக்கிறது. தென்னாப்பிரிக்காவில் சரியாக இடம் கிடைக்காத வீரர்கள், இங்கிலாந்து சென்று கவுண்டியில் விளையாடி பின்னர் இங்கிலாந்திற்கே விளையாட தொடங்கிவிடுகிறார்கள். இந்த மாதிரி நிறைய வீரர்கள் செல்ல ஆரம்பித்துவிட்டார்கள். தென்னாப்பிரிக்கா வீரர்கள் நாட்டைவிட்டு வெளியேறி வேறு நாட்டிற்கு விளையாடும் நிலை உருவாகியிருக்கிறது. இதை தென்னாப்பிரிக்கா போர்ட்தான் சரி செய்ய வேண்டும். வீரர்களை சரியாக தக்கவைத்துக்கொள்ள தெரிந்திருக்க வேண்டும். இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா இந்த மூன்று அணிகளுக்கு வேறுமாதிரியான பிரச்சனைகள் இருக்கிறது. இந்தியாவை பொருத்தவரை அவர்களிடம் நல்ல விளையாடக்கூடிய வீரர்கள் இருக்கிறார்கள். அதை சரியாக தேர்வு செய்ய வேண்டும். ஆஸ்திரேலியா இதையே கண்டினியூ செய்தார்கள் என்றால் போதுமானது. தென்னாப்பிரிக்க அணிதான் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது.