"பெரும்பாலான சூதாட்ட தரகர்கள் சவுரவ் கங்குலி கேப்டனாக இருந்த காலத்தில் போட்டிகளை பிக்சிங் செய்ய விரும்பினர். ஆனால் அது ஒருபோதும் நடக்காது என்பதையும் அவர்கள் அறிந்திருந்தனர். ஏனென்றால் தாதா மிகவும் தேசபக்தி வாய்ந்த கேப்டன்களில் ஒருவர். மேலும் அவரை அணுகுவதற்கான தைரியம் எந்த சூதாட்ட தரகருக்கும் இல்லை. ஏனெனில் அது அவர்களின் வணிகத்தை பினிஷ் செய்துவிடும் என்பதை அறிந்திருந்தனர்." என்று முன்னாள் புக்கி ஒருவர் தெரிவித்திருந்தார். இப்படி சூதாட்ட தரகர்கள் கூட கங்குலியின் அளவில்லா தேசப்பற்றை கண்டு வியந்தனர்.
இந்திய கிரிக்கெட்டை கட்டமைத்த தாதா:
சச்சினுக்கு பிட்னஸ் பிரச்சனை - கொடிகட்டி பறந்த சூதாட்ட சர்ச்சைகள் - கிரிக்கெட்டில் அரசியல் - நிலைத்தன்மை இல்லாத டீம் நிர்வாகம் - 1999 உலகக்கோப்பையில் அதிக ரன்கள் அடித்தும் ஒருநாள் போட்டிகளில் உறுதியாகாத ராகுல் திராவிட்டின் இடம் - சச்சினும், கங்குலியும் அவுட்டானால் 99% தோல்வி - அனில் கும்ப்ளேவை தவிர நல்ல ஸ்பின் பவுலர்கள் இல்லாத நிலை, அணியின் ஒரே ஒரு நல்ல ஃபாஸ்ட் பவுலரான ஸ்ரீநாத் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையின் இறுதி கட்டத்தில் - பல விக்கெட் கீப்பர்களை முயற்சி செய்தும் நிரந்தர விக்கெட் கீப்பர் இல்லாமல் தடுமாற்றம் - ஒரு சிறந்த ஆல்ரவுண்டர்கள் கூட அணியில் இல்லாதது,... என பலவிதமான இக்கட்டான சூழ்நிலையில் தலைமை பொறுப்பு ஏற்றார் வங்கத்து மகாராஜ். இதன்பின் பெயரில் மட்டுமல்ல, கிரிக்கெட்டிலும் தான் மகாராஜ் என்பதை உலகிற்கு உணர்த்தினார் கங்குலி.
1990-களில் வெளிநாடுகளில் இந்திய அணியின் செயல்பாடு ஒரு சில தொடர்களில் ஓரளவு இருந்தாலும், பெரும்பாலான தொடர்களில் மிகவும் மோசமாகவே இருந்தது. அந்த மோசமான வரலாற்றை கங்குலி தலைமை மாற்றியது. உள்நாடு, வெளிநாடு என பேதமின்றி கங்குலியின் ஆக்ரோஷமான லீடர்ஷிப்பின் கீழ் எந்த அணியையும் வெல்ல முடியும் என்ற நம்பிக்கையுடன் களமிறங்கியது.
வலுவான ஒரு அணியை கட்டமைத்தார். சேவாக் , யுவராஜ் , ஹர்பஜன் , ஜாஹீர் கான் என புது இளம் வீரர்களை அணிக்கு கொண்டு வந்தார். இவர்கள் தான் பிற்காலத்தில் 2007, 2011 உலகக்கோப்பை வெற்றிகளுக்கு காரணகர்த்தாக்கள்.
தாதாவுக்கு பிறகு தோனி, கோலி என பல சிறப்பான இந்திய அணியின் கேப்டன்கள் அணிக்கு கிடைத்தாலும், கங்குலியின் தலைமையையும், அவரது ஆக்ரோஷத்தையும், அவரது ஸ்டைலையும், அவரது கிரிக்கெட் ஆட்டத்தையும் விரும்பியதன் காரணமாக, வேறு ஒருவருக்கு ரசிகராக மாறாத பல ரசிகர்கள் இன்றும் இந்தியாவில் உண்டு. தரவரிசைப்பட்டியலில் 8-வது இடத்தில் இருந்த இந்திய அணியை, தன்னுடைய தனித்துவமான கேப்டன்ஷிப்பால் 2-ஆம் இடத்திற்கு கொண்டுவந்தார் கங்குலி.
ஆக்ரோஷம்... பதிலுக்கு பதில்:
இந்திய சுற்றுப்பயணத்தின் போது வான்கடே மைதானத்தில் இங்கிலாந்து வீரர் பிளிண்டாப் இந்திய அணியை வெற்றி கொண்ட பிறகு, சட்டையை கழற்றி சுற்றி வெற்றியை கொண்டாடினார். இது இந்திய ரசிகர்களுக்கு வருத்தத்தை தந்தது.
அதன்பிறகு இங்கிலாந்தில் நடைபெற்ற நாட்வெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணியை தோற்கடித்து, யுவராஜ்-கைப் இணையின் அற்புதமான ஆட்டத்தின் காரணமாக வரலாற்று சிறப்புமிக்க சேசிங் செய்து அசத்தியது இந்திய அணி. அப்போது கங்குலி லார்ட்ஸ் மைதானத்தில் தனது ஜெர்சியை கழற்றி சுழற்றி வெற்றியை கொண்டாடினார். அந்த தருணம் மூலம் இந்திய ரசிகர்களின் மனதை நிரந்தரமாக கங்குலி ஆக்கிரமித்தார்.
"லார்ட்ஸ் மைதானம் கிரிக்கெட்டின் மெக்கா போன்றது. கங்குலி இப்படி செய்திருக்கக் கூடாது" என இங்கிலாந்தின் பாய்காட் கூறினார். "உங்களுக்கு லார்ட்ஸ் மெக்கா என்றால் எங்களுக்கு வான்கடே தான் மெக்கா" என பதிலடி கொடுத்து விமர்சகர்களை அடக்கினார் கங்குலி.
தியாகம்:
சேவாக் ஓப்பனிங் இறங்கினால் தான் சரியாக இருக்குமென கருதிய கங்குலி தன்னுடய இடத்தை தியாகம் செய்தார். உலக கிரிக்கெட்டில் புதுவிதமான ஓப்பனிங் ஸ்டைலை அறிமுகப்படுத்தி சேவாக் அசத்தினார். சேவாக் எனும் அதிரடி மன்னனை இந்திய கிரிக்கெட்டிற்கு அளித்ததில் கங்குலியின் பங்கு மிகவும் முக்கியமானது.
உலகின் சிறந்த வீரர்களை அறிமுகப்படுத்தியவர்:
உள்ளூர் போட்டிகளில் திறமையாக விளையாடும் இளம் வீரர்கள் அணியில் இடம்பெற பரிந்துரை செய்தார். வீரர்களின் தனிப்பட்ட திறமையை அறிந்து அதற்கேற்ப அவர்களை பயன்படுத்தி சாதிக்க வைத்தார். முன்னாள் கேப்டன் தோனியும் அவர் தேடலில் கிடைத்த பொக்கிஷமே. அணிக்காக எப்படிப்பட்ட அதிரடி முடிவுகளையும் எடுக்க அவர் தயங்கியதில்லை.
ஆஸ்திரேலியாவின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வந்தவர்...
16 தொடர் வெற்றிகளை கண்டிருந்த ஆஸ்திரேலிய அணியை 2000-ஆம் ஆண்டில் வீழ்த்திய பெருமை கங்குலிக்கு உண்டு. 2003-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின்போது, பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 323 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி 62 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தது. 196 பந்துகளில் 144 ரன்கள் எடுத்தார் கங்குலி. இந்திய அணியின் ஸ்கோர் 409. அந்த போட்டியில் கங்குலியின் அசத்தலான பேட்டிங் மூலம் இந்தியா அணி டிரா செய்தது. ஆட்ட நாயகன் விருதையும் பெற்றார் தாதா. அந்த தொடரில் ஆஸ்திரேலியாவில் 1-1 என டிரா செய்து சாதனை படைத்தது கங்குலியின் இந்திய அணி.
கங்குலி கேப்டனாக பொறுப்பேற்ற பின்பு போராடும் குணத்தையும், எந்த நாட்டிலும் எந்த போட்டியிலும் நம்மால் வெல்ல முடியும் என்ற நம்பிக்கையையும் வீரர்களிடம் உருவாக்கினார். இவர் கேப்டனாக பொறுப்பேற்ற பின்பு தரவரிசை பட்டியலில் இந்திய அணி முன்னேற தொடங்கியது. இளம் வீரர்களை கொண்டு இந்திய அணியை கட்டமைத்து, அன்றைய கிரிக்கெட் உலகின் சிம்ம சொப்பனமாக இருந்த ஆஸ்திரேலியா அணிக்கே கடும் போட்டியாக மாற்றினார். தனது அணி வீரர்களிடமிருந்து 100% திறமையை வெளிக்கொண்டு வருவது தான் சிறந்த தலைவன். அதை சரியாக செய்து வந்தார் கங்குலி.
ஸ்டேடியத்தை தாண்டிய சிக்ஸர்கள்...
அன்றே கங்குலியின் சிக்ஸர்களுக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. அவர் இறங்கி வந்து லெக் சைடில் அடிக்கும் சிக்ஸர்கள் வான வேடிக்கை போல இருக்கும். இவரின் சிக்ஸர்களால் சில முறை மைதானத்தில் ரசிகர்கள் காயமும் பட்டதுண்டு.
ஆஃப் சைடின் கடவுள்...
கீப்பர், பவுலர் தவிர அனைவரும் ஃஆப் சைடில் பீல்டிங் நின்றாலும், கங்குலியை நோக்கி வரும்பந்து பந்து ஃஆப் சைடு பவுண்டரி லைனை கடக்கும். இது கங்குலியால் மட்டுமே முடிந்த ஒன்று. இதனால் தான் "ஃஆப் சைடின் கடவுள்" என்று அழைக்கப்படுகிறார் சவுரவ்.
தனி ரசிகர்கள் பட்டாளம்...
2005-ஆம் ஆண்டு கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டியில் கங்குலி இல்லாத இந்திய அணி தோற்றது. ஒட்டு மொத்த மைதானமே இந்திய அணியின் தோல்வியை கொண்டாடியது. அந்த அளவிற்கு தீவிர ரசிகர்கள் வேறு எந்த வீரருக்கும் இதுவரை இல்லை.
"இந்த கிரிக்கெட் உலகில் கட்டாயம் என்னுடைய இரண்டாவது வெற்றியை நான் பதிவு செய்ய வேண்டும். இல்லையென்றால் உன் முதல் வெற்றி அதிர்ஷ்டத்தால் கிடைத்தது என்று கூற பலர் தயாராக உள்ளனர்" என்ற கங்குலி, அந்த தத்துவத்திற்கு ஏற்பவே வெற்றியும் பெற்றார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முகத்தையே மாற்றியவர் பெங்கால் டைகர் கங்குலி. இந்திய கிரிக்கெட் வரலாற்று கங்குலிக்கு முன், கங்குலிக்கு பின் என மாறும் அளவிற்கு அவரின் பங்களிப்பு இருந்தது.
கங்குலி பற்றிய சுவாரசிய தகவல்கள்:
1997-ல் நடந்த சஹாரா கோப்பையில் தொடர்ந்து 4 போட்டிகளில் ஆட்டநாயகன் விருது வாங்கி அசத்தினார். பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் அசத்திய கங்குலி அந்த தொடரில் 15 விக்கெட்களையும், 222 ரன்களையும் எடுத்தார்.
மேற்கு வங்கத்தில் இருந்த கிரிக்கெட் க்ளப்பில் விளையாடிக்கொண்டிருந்த கங்குலியின் அண்ணன் ஸ்னேஹாஷிஷ், கங்குலியின் 10-ம் வகுப்பு விடுமுறையின் போது, கங்குலியை கிரிக்கெட் பயிற்சியில் சேர்க்கும் படி அவரது தந்தையை வலியுறுத்தினார். கங்குலியும் அண்ணனோடு பயிற்சிக்கு செல்ல தனது முழு கவனத்தை கிரிக்கெட்டின் பக்கம் திருப்பினார் கங்குலி.
கங்குலி எழுதுவது, பவுலிங் செய்வது உள்ளிட்டவை எல்லாம் வலது கையால் தான். இப்படிப்பட்ட வலது கை பழக்கம் கொண்ட கங்குலி, இடது கை பேட்ஸ்மேனாக மாறியது அவரது அண்ணனை பார்த்துதான்.
மே 2013- ஆம் ஆண்டு கங்குலிக்கு மேற்கு வங்க அரசிடமிருந்து பங்கா பிபூஷன் விருது வழங்கப்பட்டது.
இந்தியன் சூப்பர் லீக் தொடரில் அட்லெடிகோ டி கொல்கத்தாவின் இணை உரிமையாளராக இருந்து வருகிறார்.
மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் ராஜர்ஹாட்டில் 1.5 கி.மீ சாலைக்கு இவரை பெருமைப்படுத்தும் விதமாக சவ்ரவ் என பெயரிடப்பட்டுள்ளது.