Skip to main content

டீ காக்கை தேடி மைதானத்திற்கே வந்த அழையா விருந்தாளி!

Published on 01/04/2018 | Edited on 01/04/2018

தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜோனஸ்பெர்க்கில் உள்ள வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

 

DeKock

 

இந்தப் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தின்போது ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்துகொண்டிருந்தது. தென் ஆப்பிரிக்காவின் கேசவ் மகாராஜ் வீசிய பந்தை ஷான் மார்ஸ் இறங்கி அடிக்க முயற்சித்த போது, அதைத் தவறவிட்டார். ஸ்டம்பிங் வாய்ப்பை உணர்ந்த விக்கெட் கீப்பர் டீ காக் பந்தைப் பிடிக்க முயற்சிசெய்த போது, ஏதோ குறுக்கிட்ட நிலையில் பந்தைக் கவனிக்காமல் கோட்டைவிட்டார். ஆட்டத்தின் மிக முக்கியமான தருணத்தில் ஷான் மார்ஸின் விக்கெட்டை வீழ்த்தமுடியாமல் சக வீரர்கள் அதிருப்தியில் இருந்தபோது, டீ காக் தனது இடது தோள்பட்டையின் கீழ் கடித்துக் கொண்டிருந்த தேனீயை தட்டிவிட்டு அப்படியே அமர்ந்துவிட்டார். இதனால், ஆட்டம் சிறிதுநேரம் தடைப்பட்டது. தென் ஆப்பிரிக்காவின் பிஸியோ கிரெய்க் களத்திற்கு வந்து பிரச்சனையை சரிசெய்தார்.

 

டீ காக் தவறவிட்ட ஷான் மார்ஷ் 16 ரன்களில் தன் விக்கெட்டைப் பறிகொடுத்து பெவிலியன் திரும்பினார். ஆட்டத்தின் மூன்றாவது நாளான இன்று, ஆஸி அணி 7 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்துள்ளது. 

 

 

வாண்டரர்ஸ் மைதானத்தில் தேனீக்கள் குறுக்கிடுவது புதிதல்ல. சென்ற ஆண்டு பிப்ரவரி மாதம் இலங்கை - தென் ஆப்பிரிக்கா மோதிய ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது தேனீக்கள் குறுக்கிட்டு நீண்டநேரம் ஆட்டம் தடைப்பட்டது குறிப்பிடத்தக்கது.