ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் தொடர்ச்சியாக இரு தோல்விகளைச் சந்தித்த இந்திய அணி மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை இழந்துள்ளது. பேட்டிங்கில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இந்திய அணி இரு போட்டிகளிலும் 300 ரன்களுக்கும் மேல் குவித்தது. அதே நேரத்தில் பவுலிங் மற்றும் ஃபீல்டிங் படு சொதப்பலாக அமைய இரு போட்டிகளிலும் வெற்றிக்கு அருகில் கூட நெருங்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், விராட் கோலியின் அணி வழிநடத்தும் திறன் குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளரான ஆஷிஷ் நெஹ்ரா இது குறித்து பேசுகையில், "விராட் கோலி முகமது ஷமிக்கு இரு ஓவர்கள் கொடுத்தார். அதன்பிறகு நவ்தீப் சைனியை அழைத்தார். வேறுமுனையில் இருந்து ஷமி பந்துவீச வேண்டும் என்று விராட் கோலி விரும்பியிருக்கலாம். ஆனால், புது பந்தில் பும்ராவிற்கு எதற்கு இரு ஓவர்கள் மட்டும் கொடுத்தார் என்று எனக்கு தெரியவில்லை. பந்துவீச்சில் அவர் அடிக்கடி மாற்றம் செய்கிறார் என்பதை ஏற்றுக்கொள்கிறேன். அவர் கையில் 5 பவுலர்கள் மட்டுமே இருந்தனர். மயங்க் அகர்வால் மற்றும் ஹர்திக் பாண்டியா பந்துவீசியது களத்தில் எடுக்கப்பட்ட முடிவு. இந்தியாவிற்கு சாதகமாக போட்டி அமைந்திருந்தால் இவர்கள் இருவரும் பந்துவீசி நாம் பார்த்திருக்க முடியாது. விராட் கோலி அவசரப்படுவது தெரிகிறது. கடந்த போட்டியிலும் இதுதான் நடந்தது. 350 ரன்களை சில முறை அவர் சேசிங் செய்துள்ளார். ஆகையால் அவருக்கு அது பெரிய விஷயம் இல்லை. கடந்த போட்டியில் அவர் 375 ரன்கள் சேசிங் செய்வது போல விளையாடாமல் 475 ரன்கள் சேசிங் செய்ய இருப்பது போல விளையாடினார். விராட் கோலி அவசரத்தனம் மிகுந்த கேப்டனாக இருக்கிறார். அடிக்கடி பந்துவீச்சில் மாற்றம் செய்கிறார். இது அவர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய இடம்" எனக் கூறினார்.