சர்வதேச போட்டிகளில் விளையாட குறைந்தபட்ச வயதாக 15 வயதை ஐசிசி நிர்ணயித்துள்ளது.
சர்வதேச போட்டிகளில் விளையாட கிரிக்கெட் வீரர்களுக்கு எந்தவித வயது கட்டுப்பாடுகளும் முன்னர் இல்லாதிருந்த நிலையில் ஐசிசி இந்த புதிய விதியை அறிமுகம் செய்துள்ளது. இந்த விதியானது ஆண்கள், பெண்கள், 19 வயதிற்கு உட்பட்டோர் என அனைத்து விதமான தொடர்களுக்கும் பொருந்தும். மேலும், கிரிக்கெட் வாரியம் தங்கள் நாட்டிற்காக 15 வயதிற்கும் குறைவான ஒரு வீரர் விளையாட வேண்டும் என்று விரும்பினால் அவர்கள் ஐசிசி-யிடம் அனுமதி கேட்டு விண்ணப்பிக்கலாம் என கூடுதல் சலுகையும் வழங்கப்பட்டுள்ளது.
அந்த விண்ணப்ப பரிசீலனையின்போது, வீரரின் உடற்தகுதி, மனநலம், சர்வதேச போட்டிகளில் விளையாடும் அளவிற்கான தன்மை உள்ளதா எனப் பல்வேறு பரிசோதனைகள் நடைபெறும் என்றும் அதன் பின்னரே அவ்வீரரை அனுமதிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது.
இளம்வயதில் சர்வதேச போட்டிகளில் அறிமுகமாகிய வீரர் என்ற சாதனை பாகிஸ்தானை சேர்ந்த ஹசன் ராசா வசமுள்ளது. ஹசன் ராசா சர்வதேச போட்டிகளில் அறிமுகமாகிய போது அவரது வயது 14 ஆண்டுகள் 227 நாட்கள் ஆகும்.