புதுக்கோட்டையில் அறிவியல் இயக்கம் சார்பில் பிப்ரவரி 14 ந் தேதி தொடங்கிய புத்தகத்திருவிழாவில் மாணவ, மாணவிகள், வாசகர்கள் திரளாக வந்து புத்தகங்களை வாங்கிச் செல்கின்றனர். ஒவ்வொரு நாள் மாலை, இரவு நேரங்களில் மக்கள் மனம் கவர்ந்தவர்கள் கலந்து கொண்டு பேசி வருகின்றனர். இந்த நிலையில் திரைப்படப்பாடலாசிரியர் கவிஞர் யுகபாரதி புத்தகத் திருவிழாவில் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், "திரைப்படங்களுக்கு பாட்டு எழுதுவது கடினமானதல்ல. தமிழர்களாகப் பிறந்த எல்லோரும் பாடல் எழுதுவது இயற்கையானது. சில இயக்குனர்கள் விலக்கி வைத்த எனது பாடல்களை, வேறு படங்களுக்குப் பயன்படுத்தும் போது மக்கள் கொண்டாடியுள்ளனர். பொழுதுபோக்கு பாடல்களை எழுதிவரும் அதேவேளையில் மிகவும் கவனத்தோடு தவறான பொருளில்லாமல் பாடல்களை எழுதவும் தொடர்ந்து முயற்சித்து வருகிறேன். அப்படி எனக்கு ஆத்மார்த்தமாக நான் எழுதிய பாடல், ‘என்னங்க சார் உங்க சட்டம்’ என்ற ஜோக்கர் படப் பாடல்.
மக்கள் ரசிக்கும்படியான, அவர்கள் புழங்கும் மொழியிலேயே எளிய வார்த்தைகளால் எழுதப்படும் பாடல்; பார்ப்பதற்கு சுலபமாக இருக்கும். ஆனால், அந்த எளிய சொற்களை இயல்பாகக் கொண்டுவருவதற்கு ஏராளமான புத்தகங்களை வாசிக்க வேண்டும். தான் புழங்கும் துறைக்கான புத்தகங்களை மட்டுமே படைப்பாளிகள் வாசிக்கக்கூடாது. அனைத்து வகையான புத்தகங்களையும் வாசிக்கும் போதுதான் தெளிவு பிறக்கும். கவிஞர்கள், பாடலாசிரியர்கள் உரைநடையையும் எழுதிப் பழக வேண்டும். அப்போதுதான், ஜனரஞ்சமாக பாடல்களை எழுத முடியும். கொஞ்சம் பயிற்சியும் முயற்சியும், கூடவே நல்ல வாசிப்பு இருந்தால் திரைப்படப் பாடல்களைத் தாராளமாக எழுத முடியும்" என்றார்.
விழாவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கவிதைப்பித்தன் பேசும்போது, "அடித்தட்டு மக்களிடம் இருந்து வரும் படைப்பாளிகளின் வளர்ச்சிக்கு பல முட்டுக்கட்டைகள், தடைகள் வரலாம். அதற்கு என் அனுபவத்திலிருந்தே ஏராளமான உதாரணங்களை சொல்ல முடியும். அவற்றை எதிர்கொள்ள வேறு எந்த ஆயுதமும் நமக்கு கைகொடுக்காது. நமக்குத் துணையாக இருப்பவை புத்தகங்கள் மட்டுமே. வாசிப்பதுதான் நம்மை எதிர்நோக்கி வரும் இடர்பாடுகளைத் தகர்க்கும்" என்றார்.
தொல்லியல் கழகத்தின் மாநிலப் பொதுச் செயலர் பேராசிரியர் சு.ராஜவேலு பேசும்போது, "அதிக தொல்லியல் எச்சங்களைக் கொண்டது புதுக்கோட்டை மாவட்டம். கீழடிக்கு நிகராக தொல்லியல் தடயங்கள் இங்கு நிறைய உள்ளன. புதுக்கோட்டையை மையப்படுத்தியே மாநிலத்தின் தெற்குப் பகுதியை எல்லையாகக் கொண்ட தனித் தொல்லியல் வட்டம் மத்திய தொல்லியல் துறையால் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. சங்க காலக் கோட்டையான பொற்பனைக்கோட்டையை அழகப்பா பல்கலைக்கழகத்தின் மூலமாக ஆய்வு செய்ய இருக்கிறோம்.
நாடு முழுவதும் 600, 700 இடங்களில் ஆய்வுகள் நடந்துள்ளது. ஆனால் எளிய மக்கள் பானை ஓடுகளில் எழுதி வைத்த சின்னங்கள் தமிழ்நாட்டுப் பகுதியில்தான் கிடைத்துள்ளன. அந்தளவுக்கு சாதரண பாமர மக்களும், பெண்களும் எழுத்தறிவு மிக்கவர்களாக தமிழர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதை இதுவே சான்றாக உள்ளது" என்றார்.