கஷ்டப்பட்டு உழைத்து, ஆம் பிறரை விட சற்று அதிகமாகவே கஷ்டப்பட்டுத்தான்... பள்ளிப்படிப்பை முடித்துவிட்டாள் அவள். நல்ல மதிப்பெண். அந்த ஊர் கல்வித்திட்டப்படி மெட்ரிகுலேஷன் கல்வியை முடித்து பள்ளி மேல்நிலை படிப்புக்காக இங்கு மீண்டும் கஷ்டப்பட்டு சேர்ந்துவிட்டாள். சேர்த்துக்கொள்வார்களோ மாட்டார்களோ, என்ன கேட்டு புண்படுத்துவார்களோ என்ற எல்லா தடைகளையும் தாண்டி வெற்றிகரமாக சேர்ந்துமுதல் நாள் வகுப்புக்காக வந்துவிட்டாள். வந்தவளுக்கு இன்னும் ஓர் அதிர்ச்சி, வகுப்பு மூன்றாம் தளத்திலாம். பள்ளி, கல்லூரி கட்டிடங்கள் என்றால் பல தளங்கள் இருப்பதும், அதில் பெரும்பாலும் மேல் தளங்களை மாணவர்கள் விரும்புவதும் வழக்கமானது தானே? அதிலென்ன அதிர்ச்சி? ஏனென்றால், இவள் வழக்கமானவள் அல்ல. பிறக்கும்பொழுதே இரு கைகளும் இரு கால்களும் இல்லாமல் பிறந்தவள். தனது இரு முழங்கைகளாலேயே எழுதிப் பழகி படித்து இந்த வகுப்புவரை வந்தவள். அவளுக்குத்தான் தனது வகுப்பு மூன்றாம் தளம் என்றதும் அதிர்ச்சி ஏற்பட்டது. ஆனால், அந்த அதிர்ச்சி நீண்ட நேரமில்லை. 'ஜாரா'வுக்கு இது வழக்கமானது தான். அதுவரை வாழ்வில் அவளுக்கு எதுவும் சுலபமாக இருந்ததில்லை, போராடப் பழகியே இருந்தாள்.

Advertisment

Zara Abbas

"எல்லோரும் என்னிடம் கேட்கிறார்கள், 'உங்களின் பெரிய சவால் எது?', 'இந்த சவாலை எப்படி சந்திக்கிறீர்கள்?' என்றெல்லாம். எனக்கு என் சவால்கள் பெரிதாகத் தெரியவில்லை. இரு கால்களால் நடப்பது எப்படிப்பட்ட உணர்வாக இருக்குமென்பது எனக்கு தெரியவே தெரியாது. என் வாழ்க்கையே இப்படித்தான் தொடங்கியது. முதல் சவால் என் பெற்றோருக்குத் தான். என்னை வளர்த்தது, படிக்க வைத்தது, பிற குழந்தைகள் மத்தியில் என்னை சேர்த்தது என அனைத்துமே அவர்களுக்குப் பெரிய சவால் தான். அவர்கள் எப்படி அதைக் கடந்தார்கள் என்று தினம் தினம் நினைக்கிறேன்", ஒரு பேட்டியில் இப்படி கூறியவர் 26 வயது ஜாரா அப்பாஸ்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் வசிக்கும் இந்தப் பெண், இரு கைகளும் கால்களும் இல்லாத குறையை சற்றும் கருதாமல், தன் பள்ளிக்கல்வியில் மிகச் சிறந்த மதிப்பெண் பெற்று, அதற்காக மாநில முதல்வரிடம் தங்கப் பதக்கம் பெற்றவர். மூன்றாம் தளத்தில் வகுப்பறை என்றாலும் பெற்றோர், நண்பர்கள் உதவியுடன், முக்கியமாக தன் நம்பிக்கையால், மேலாண்மைக் கல்வியில் இளங்கலை முடித்து, பின்னர் முதுகலையும் படித்தவர். கல்விக்குப்பின் அவர் தேர்ந்தெடுத்த பணிதான் சிறப்புத் திறனாளிகளிலேயேஅவரை இன்னும் சிறப்பான திறனாளியாக்கியிருக்கிறது. ஆம், ஒரு இடத்தில் இருந்து செய்யும் அலுவலகப் பணியை தேர்ந்தெடுக்காமல், தன் குறையை மீறி தான் வாழும் தைரியத்தை, நம்பிக்கையை பிறருக்கும் பரப்ப, ஒரு பயிற்சி நிறுவனத்தில் பணிநிமித்த பயிற்சியாளராக, உத்வேக பேச்சாளராக (Motivational Speaker) பணியாற்றுகிறார்.

zara convocation

Advertisment

மிகுந்த தன்னம்பிக்கை உடையவர் தான், போராட்ட குணத்தால்தான் தினம் தினம் வாழ்கிறார். ஆனாலும், அதிருப்திகளே இல்லாத தேவ பிறவியல்ல ஜாரா. "சிறப்புக் குழந்தைகள், சிறப்புத் திறனாளிகள் என்று பெயருக்கு அழைக்கும் இந்த சமூகம், அரசாங்கம், அவர்களுக்கு எந்த ஒரு சிறப்பு வசதிகளையும் செய்து தரவில்லை. இத்தனைக்கும் அவர்களுக்கு அது அடிப்படை தேவை. பேருந்திலிருந்து பொதுக் கழிவறை வரை மாற்றுத் திறனாளிகளுக்கென எந்த வசதியும் செய்து தராத மனிதர்களிடையே தான் அவர்கள் மீது அன்போடு நாங்கள் வாழ்கிறோம். அப்படிப்பட்ட இந்த வெளியுலகுக்கு என்னை அனுப்ப என் பெற்றோர் மிகவும் தயங்கினார்கள். அதுவும் ஒரு பெண்ணாக இருப்பதால் இன்னும் அதிகமாக பயந்தார்கள்", என்று தன் இயல்பான ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

சிறப்பான மதிப்பெண்களுடன் கல்வியை முடித்தபோது இவருக்கு வேலை எளிதாகக் கிடைத்துவிடவில்லை. சமூக அக்கறை, அனைவருக்கும் வாய்ப்பு என பேசும் நிறுவனங்கள் எல்லாம், தனது 'ரெஸ்யூமே'வோடு (Resume) ஜாரா சென்றபோது ஏற்கவில்லை. "எப்படி பயணிப்பீர்கள், எப்படி கணினி பயன்படுத்துவீர்கள், எப்படி கழிவறை பயன்படுத்துவீர்கள்?' என்று என்னை சங்கடப்படுத்தும் பல கேள்விகளைக் கேட்டார்கள். பொறுமையாக எதிர்கொண்டேன். என் இலக்கு இது என நிர்ணயித்து அதை நோக்கிச் சென்றேன். இடையில் உதவியவர்களை எண்ணி மகிழ்ந்தேன். தள்ளியவர்களை, தடுத்தவர்களை, நகைத்தவர்களை மறந்தேன். பாகிஸ்தான், பெண் கல்வியில் அடைய வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது. ஒவ்வொரு பெண்கள் பள்ளிக்கும் சென்று ஊக்கப்படுத்த விரும்புகிறேன்" என்கிறார். ஆயிரக்கணக்கான மாணவர்களை, மென்பொருள் வல்லுநர்களை, பணியாளர்களை இதுவரை பயிற்றுவித்திருக்கிறார். பார்ப்பவர்களுக்கெல்லாம் தன்னம்பிக்கையை பரப்பியிருக்கிறார். தன் உடலை அவர்களுக்கு உதாரணமாகக் காட்டி, "நான் இவ்வளவு தூரம் வந்திருக்கிறேன், நீங்கள் வர முடியாதா?" என்று கேட்கிறார்.

zara speech

ஜாரா, மூன்றாம் வகுப்பு படித்த பொழுது, ஒரு நாள் வகுப்பில் ஆசிரியர் உள்ளே வர, மாணவர்கள் அனைவரும் எழுந்து வணங்கினர். அப்பொழுது அவர் அருகே இருந்த மாணவி கிண்டலாக, "எல்லோரும் நின்னு வணக்கம் சொல்றோம்... நீ மட்டும் சொல்ல மாட்டியா? எந்திரிக்க முடியாதா?" என்று ஜாராவைக் கேட்டாள். அன்று வீட்டிற்கு வந்து மணிக்கணக்கில் தன் அம்மாவிடம் அழுத ஜாரா, தன்னை பள்ளிக்கு அனுப்பவேண்டாமென்று சொன்னாள். ஆனால், இப்பொழுது ஜாரா சொல்கிறார், "எனக்குத் தெரியும், என்னை தாழ்வாகப் பேசுபவர்கள் எவ்வளவு உயரமான கால்கள் கொண்டிருந்தாலும் என் உயரத்துக்கு அவர்களால் வர முடியாதென்று".

ஜாரா அப்பாஸ் நமக்குக் கற்றுத்தருவது, 'குறையை மற, இருப்பதை நினை. அதைக் கொண்டு உன் கனவை அடை' என்பது தான். எனக்கு கைகளும் கால்களும் இல்லாததுதான் என் ஆட்டத்துக்கான விதிமுறையென்றால், அதோடு விளையாடி ஜெயிப்பேன் என்கிறார். நம் ஒவ்வொருவருக்கும் ஒரு குறை இருக்கும், கஷடங்கள் இருக்கும். அது தான் நம் ஆட்டத்துக்கான விதிமுறை. அதோடு ஆடி வெல்ல வேண்டும், வெல்ல முடியும். அதற்கு உதாரணம் தான் ஜாரா. காரணங்கள் சொல்லிக்கொண்டேசெயல்படாமல் இருப்பது வேலைக்காகாது என்பதே ஜாரா நமக்குரைக்கும் பாடம். அவரே கூறியிருக்கிறார், "உங்களால் ஒரு விஷயத்தை செய்ய முடியுமா என்ற சந்தேகம் பிறருக்கு வருவது, நீங்கள் கொடுக்கும் வாய்ப்பினால் தான். அவர்கள் சந்தேகப்படும் முன் நீங்கள் செயல்பட தொடங்க வேண்டும்" என்று.

Advertisment

zara speech 1

சமூக வலைத்தளங்களில் இயங்குகிறீர்களா என்று கேட்டதற்கு, 'ஆம், இயங்குகிறேன். ஆனால் ஒவ்வொரு நாளும் அதைப் பார்த்து வருந்துகிறேன். அங்கு, யார் யாரோ செய்யும் கோமாளித்தனங்களை ஹீரோயிசமாகப் பேசிப் புகழ்கிறார்கள். உண்மையில் கவனிக்கப்பட வேண்டியவர்கள் வேறு...' என்கிறார். ஆம், உண்மையில் ஹீரோக்கள் அவர்களல்ல, ஜாரா போன்றவர்கள் தான்.