கடந்த ஒரு வாரமாக 'சென்டினல்' என்ற வார்த்தையை அடிக்கடி கேட்டிருப்போம் அல்லது செய்திதாள் படிக்கும்போது எங்கோ ஓரிடத்தில் கடந்து வந்திருப்போம். அப்படிபட்ட சென்டினல் என்பது அந்தமானில் உள்ள ஒரு சிறு தீவுப்பகுதி ஆகும். இதில் வசிக்கும் சென்டினல் இன ஆதிவாசிகளை காக்கும் பொருட்டு அந்த தீவில் 3 மைல்களுக்கு மேல் செல்ல கூடாது என்பது இந்திய அரசாங்கத்தின் உத்தரவு. கடந்த வாரம் இந்த உத்தரவை மீறி சென்ற வெளிநாட்டவர் ஆதிவாசிகளால் கொல்லப்பட்டார். இதுவே இந்த பகுதி பற்றின பேச்சு கடந்த வாரங்களில் அதிகரிக்க காரணம்.
2013 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி உலகம் முழுவதும் சுமார் 100 ஆதிவாசி இனங்கள் மனிதனின் தொடர்பின்றி வாழ்ந்து வருவதாக தெரியவந்தது. இதில் நீண்ட காலமாக மனித தொடர்பே இன்றி வாழ்ந்து வரும் இனமாக இந்தியாவின் அந்தமான் தீவுகளில் வசிக்கும் சென்டினல் இன ஆதிவாசியின மக்கள் கருதப்படுகின்றனர். 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 50 முதல் 250 பேர் இருக்கலாம் என கணிக்கப்பட்டது. ஆனால் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 12 ஆண்களும், 3 பெண்களும் மட்டுமே பார்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த இனத்தில் பெரும்பான்மை மக்கள் வெளி உலகினருடன் தொடர்பற்று இருக்க நினைப்பதால் பெரும்பாலும் நம் மக்களை காணும் பொழுது ஒளிந்துகொள்ளவோ அல்லது தாக்கவோ முற்படுகின்றனர்.
இது போல் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் மனித தொடர்பே அற்ற ஆதிவாசிகள் இன்று வரை வாழ்ந்து வருகின்றனர். அதில் அதிகபட்சமாக இந்தோனேசியாவின் நியூ கினியா தீவுகளில் 44 ஆதிவாசி இன குழுக்கள் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. ஆசிய நாடுகளில் மட்டுமின்றி, நாம் கலாச்சாரத்தில் பின்பற்றும் மேற்கத்திய நாடுகள், அமெரிக்க நாடுகளிலும் ஆதிவாசிகள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர். இதில் மெக்ஸிகோவில் வசிக்கும் ஆதிவாசியின மக்கள், மாயன் இனத்தின் வழி வந்தவர்களாக கருதப்படுகின்றனர். மேலும் பராகுவே, பெரு, பிரேசில், கொலம்பியா உள்ளிட்ட நாடுகளிலும் மனித தொடர்பற்ற ஆதிவாசி இன மக்கள் வசித்து வருகின்றனர்.
சமூகசெயல்பாட்டாளர்கள் மற்றும் மருத்துவர்களின் கருத்துப்படி இவர்களை தொடர்புகொள்ளாமல் இருப்பதே சிறந்ததென கருதுகின்றனர். மனிதருக்கு சாதாரணமாக வரும் வைரஸ், பூஞ்சை நோய்களுக்கான எதிர்ப்பு சக்தி இவர்களிடம் குறைவாக இருக்கும். எனவே நாம் தொடர்புகொண்டால் அவர்கள் நோய்வாய்ப்பட்டு இறக்கவும் கூட நேரிடலாம் என்கின்றனர். அவர்களது பழமையையும், உயிரையும் காக்க வேண்டுமானால் நாம் அவர்களிடமிருந்து விலகி இருப்பதே சிறந்தது என்பது ஆராய்ச்சியாளர்கள் கருத்து.