வயிற்றுப் புண், உடல் வலி ஆகியவற்றுக்கான சிறந்த மருந்து குறித்து ஆயுர்வேத மருத்துவர் சுகந்தன் விளக்குகிறார்.
பிரண்டை என்பதில் பல வகைகள் இருக்கின்றன. இதற்கு வஜ்ரவல்லி என்கிற இன்னொரு பெயரும் இருக்கிறது. பல்வேறு பாக்டீரியாக்களில் இருந்து நம்மைக் காக்கக்கூடிய சக்தி பிரண்டைக்கு இருக்கிறது என்பது கொரோனா காலத்தில் கண்டறியப்பட்டது. நேரமின்மை காரணமாக நாம் பிரண்டையை அதிகம் பயன்படுத்துவதில்லை. அந்தக் காலத்தில் பிரண்டைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. உணவில் பல்வேறு வகைகளில் பிரண்டை பயன்படுத்தப்பட்டு வந்தது.
பிரண்டையை அதிகம் பயன்படுத்தியதால் அந்தக் காலத்தில் ஆரோக்கியமாக மக்கள் வாழ்ந்தனர். இப்போது அதன் முக்கியத்துவத்தை நாம் அறிவதில்லை. பிரண்டையை நாம் அதிகம் பயன்படுத்தினால் மருத்துவரே நமக்குத் தேவையில்லை. கொரோனா காலத்தில் பிரண்டையை அதிகம் சாப்பிட்டவர்கள் விரைவில் குணமடைந்தனர். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை இது விரைவில் உருவாக்குகிறது. பெண்கள் பிரண்டையை அரைத்து சாப்பிடும்போது மாதவிடாய் பிரச்சனைகள் தீரும். வைட்டமின் டி குறைபாடு உள்ளவர்கள் பிரண்டை சாப்பிடலாம்.
பிரண்டையை பொடியாகச் செய்து, சாதத்தில் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். பிரண்டை உப்பு பல இடங்களில் கிடைக்கிறது. அதை நாம் தினமும் சாப்பிட்டு வந்தால் கேஸ் பிரச்சனைகள் தீரும். பிரண்டையின் தோல்களைக் களைந்து, மோரில் ஊறவைத்து, நல்லெண்ணெயில் வதக்கி சாப்பிட்டால் அது மிகப்பெரிய மருந்தாக இருக்கும். வயிற்றுப் புண் அதிகமாக இருப்பவர்கள், வாய் துர்நாற்றம் அதிகம் இருப்பவர்கள் பிரண்டை சாப்பிடுவது நல்லது. கல்லீரலுக்கு பிரண்டை மிகவும் நல்லது.
பிரண்டையைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுவடையும். பலவீனமாக உணரும் குழந்தைகளுக்கு பிரண்டை கொடுத்தால் அவர்களுடைய பலம் அதிகரிக்கும். எலும்பு முறிவு கூட இதன் மூலம் சரியாகும். இதில் அனைத்து விதமான வைட்டமின்களும் மினரல்களும் இருக்கின்றன. பிரண்டையை நெய்யோடு சேர்த்து சாப்பிடும்போது வயிற்றில் இருக்கும் புண் ஆறும். பிரண்டையை நல்லெண்ணையோடு சேர்த்து சாப்பிடும்போது வயிறு மற்றும் வாயில் இருக்கும் புண் ஆறும். கேன்சர் நோயாளிகளுக்கும் பிரண்டையை நாம் வழங்கலாம். கர்ப்பிணிப் பெண்கள் மட்டும் பிரண்டை சாப்பிடுவதைத் தவிர்க்கலாம்.