பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2018ஆம் ஆண்டு தேர்தல் பத்திரம் திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்தத் திட்டத்தின் மூலம், தனிநபர் அல்லது கார்ப்பரேட் நிறுவனங்கள், வங்கி மூலம் தேர்தல் பத்திரத்தைப் பெற்றுக்கொள்ளலாம். இந்தத் தேர்தல் பத்திரங்களை வாங்குபவரின் பெயர், முகவரி, இந்த நிதி யாரிடம் இருந்து பெறப்பட்டது ஆகிய விவரங்கள் மற்றவர்களுக்குத் தெரியாது என்றும் கூறப்பட்டது. தனிநபரோ அல்லது கார்ப்பரேட் நிறுவனமோ, தங்களுக்கு விருப்பமான கட்சிகளுக்கு வழங்கிய நிதிக்கான பத்திரங்களை, அந்த குறிப்பிட்ட கட்சிகள் 15 நாட்களுக்குள் எந்தவித கட்டுப்பாடுமின்றி நிதியாக மாற்றிக் கொள்ளலாம் என்று கூறப்பட்டது.
இந்தத் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்ததையடுத்து, அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலமாக நிதியைப் பெறுவது என்ற திட்டத்தை எதிர்த்து ஏடிஆர், காமன் கேஸ் உள்ளிட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் மார்க்சிஸ்ட் சார்பில் உச்சநீதிமன்றத்தில் 4 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், தேர்தல் பத்திரம் திட்டம் சட்டவிரோதம் என்று தீர்ப்பு வழங்கி அந்த திட்டத்தை ரத்து செய்து கடந்தாண்டு பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், ஒவ்வொரு ஆண்டும் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்த அரசியல் கட்சிகள், தங்களது வரவு செலவு கணக்குகளை தேர்தல் ஆணையத்திடம் சமர்பித்து வருகிறது. அந்த வகையில், கடந்த நிதியாண்டில் அனைத்து கட்சிகளும் தாக்கல் செய்த கணக்குகளை தேர்தல் ஆணையம் தற்போது வெளியிட்டுள்ளது. அதில், பா.ஜ.கவின் ஆண்டு வருமானம் 2022-2023 ஆண்டில் ரூ.2,360.80 கோடி என்றிருந்த நிலையில், 2023-2024ஆம் ஆண்டில் ரூ.4,340.5 கோடியாக அதிகரித்துள்ளது. இவற்றில் தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.1,685.6 கோடி கிடைத்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. பா.ஜ.கவின் செலவினங்களைப் பொறுத்தவரை கடந்த நிதியாண்டில் பா.ஜ.கவின் மொத்த செலவு ரூ.2,217.7 கோடியாக இருந்தது. அதே 2022-2023ஆம் ஆண்டில் அறிவித்த ரூ.1,361.7 கோடியை விட 62% அதிகமாகும்.
அதே போல், பா.ஜ.கவுக்கு அடுத்தப்படியாக காங்கிரஸ் கட்சியும் தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிக நன்கொடையை பெற்றிருக்கிறது. 2022-2023ஆம் நிதியாண்டில் காங்கிரஸ் கட்சிக்கு ரூ.452.4 கோடி வருமானம் கிடைத்த நிலையில், 2023-2024இல் கிட்டத்தட்ட 170% உயர்ந்து ரூ.1,225 கோடியாக அதிகரித்துள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் மட்டுமே 2022 -2023 நிதியாண்டை விட 384% அதிகரித்து 2023-2024இல் ரூ.828.4 கோடி கிடைத்துள்ளது. அனைத்து செலவீனங்களை போக தற்போது காங்கிரஸ் கட்சியின் வங்க கணக்கில் ரூ.857 கோடி மட்டுமே உள்ளது. இதே போல், அனைத்து கட்சிகளின் செலவு கணக்கு விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளன.