உளவியல் தன்மை கொண்ட பல்வேறு வகையான தகவல்களைப் பிரபல மனநல மருத்துவர் ராதிகா முருகேசன் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். அந்த வகையில் இன்றைய ஜெனரேஷனால் உருவாகும் வாழ்க்கை முறை பாதிப்பை பற்றி விளக்குகிறார்.
ஜெனெரேஷன் கேப் பற்றி பார்க்கும்போது ஒவ்வொரு தலைமுறையும் இன்னொரு தலைமுறையை பற்றி முன்கணிப்பு வைத்திருப்பார்கள். இன்றைய தலைமுறையை இன்டர்நெட் நேட்டிவ்ஸ் என்று சொல்வதை போல நம்முடைய பெற்றோர் தலைமுறையை இன்டர்நெட் இம்மிகிரேண்ட்ஸ் என்பார்கள். அதே போல அதிகமாக அறிவுரை சொல்பவர்களை, இந்த காலத்தில் ‘பூமர்’என்ற குறிப்பிடுவது உண்டு. ஆனால், இந்த வார்த்தை 1960ல் பிரபலமானது. இரண்டாம் உலகப்போருக்கு பின்பு உருவானது தான் இந்த பூமர் தலைமுறை. உலகப் போர் அழிவிலிருந்து புதிதான வாழ்வியல், குடும்பம், புதிய பொருளாதாரம் என்று தொடக்கத்திலிருந்து ஆரம்பித்தார்கள். இவர்கள் 1964 வரை பிறந்த குழந்தைகளை பேபி பூமர்ஸ் என்று சொல்வதுண்டு. அந்த தலைமுறை போல எதிலும் பின்தங்கி இருப்பதால் அளவுக்கு அதிகமாக அறிவுரை கூறுபவர்களை ‘பூமர்’ என்று குறிப்பிடுவது உண்டு. ஆனால், பூமர் தலைமுறைக்கும் அதற்கு முந்தைய தலைமுறைக்கும் கூட ஜெனெரேஷன் கேப் இருக்க தான் செய்தது.
உதாரணமாக நமது நாட்டில் சுதந்திர காலங்களில் இருந்தவர்களை ‘கிரேட் ஜெனெரேஷன்’ என்று சொல்வதுண்டு. அடுத்து எல்லாவற்றையும் ஏற்று கொண்டு எதிர்க்காமல் அமைதியாக இருந்த தலைமுறையை ‘சைலன்ட் ஜெனெரேஷன்’ என்று சொன்னார்கள். அதே போல ‘மில்லேனியல்ஸ்’, ‘ஜெனெரேஷன் எக்ஸ்’, ‘ஆல்பா’ என்று நிறைய பெயர்கள் ஒவ்வொரு காலத்திற்கு ஏற்றாற்போல வைக்கப்படுகிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் அன்றைய தலைமுறை எதிர்கொண்ட சவால்கள் வெவ்வேறு. ‘ஜெனெரேஷன் எக்ஸ்’ மக்களுக்கு வாய்ப்புகள் என்பது மிக குறைவு. ஏதாவதொரு விவரம் தேவை என்றால் இணையதள வசதி இல்லாததால் புத்தகம் அல்லது ஆசிரியரிடம் தான் நாட முடியும். எனவே இவர்களிடம் எதிர்ப்பார்ப்பு என்பது குறைவாக இருக்கும். பொழுதுபோக்கு, உறவுமுறை, குணாதிசயம் எல்லாமே இவர்களுக்கு இன்றைய தலைமுறையை விட வித்தியாசமாக இருக்கும்.
அதுவே இன்றைய தலைமுறைக்கு சிந்திக்கும் திறன் வேகமாக இருக்கிறது. கையில் இருக்கும் இணையம், எல்லா தேடலுக்கும் உள்ள பதிலை நொடியில் கொடுத்து விடுகிறது. ஒருநாளைக்கு பத்து மணி நேரம் இணையத்தில் மூழ்கி இருக்கும் இந்தத் தலைமுறைக்கு அதனுடைய பாதிப்பு அவர்களது வாழ்க்கை முறையில் இருக்கத்தான் செய்கிறது. சோஷியல் மீடியா திறந்தவுடன் அத்தனை நண்பர்களுடன் தொடர்பு கொள்ள முடிந்தவர்களால் நிஜத்தில் சமூகத்தை எதிர்கொண்டோ, தனிப்பட்ட திறனோ இல்லாமல்தான் இருக்கிறார்கள். பெரும்பாலான ரிலேஷன்ஷிப் ஆன்லைனை சார்ந்து இந்த தலைமுறை இருப்பதால் குறிப்பாக பெண்கள் இன்டிமேட் போட்டோஸ் பகிர்ந்து அதன் மூலம் விளையும் தவறான பாடி ஷேமிங் முதல் பிளாக்மெயில் வரை சந்திக்கின்றனர். இதனால் சரியான ரிலேஷன்ஷிப் கையாள தெரியாமல் பெயின் கில்லெர்ஸ், தவறான ட்ரக்ஸ் பழக்கம் என்ற பாதையில் செல்கின்றனர். கணவன் மனைவி கூட தங்களுடைய பார்ட்னரிடம் இன்டிமேட் நேரம் என ஒதுக்குவதை காட்டிலும் மொபைல் போனிலேயே மூழ்கி இருக்கின்றனர். இதை ‘ஃபப்பிங்’ என்று குறிப்பிடுவார்கள்.
அதற்காக இன்றைய தலைமுறையை ஒரேயடியாக தவறு என்று தள்ளிவிட முடியாது. ஒரு சில நல்ல விஷயங்களும் இவர்களிடம் பார்க்க முடிகிறது. தனித்துவமாக இருப்பதிலிருந்து, சமூக சேவை மனப்பான்மை, பாலின சமத்துவம் என எல்லாவற்றிலும் ஒரு திறந்த மனப்பக்குவமும் இருக்கிறது. இவர்களுக்கு பேலன்ஸ் என்பது மட்டும் தேவையாக இருக்கிறது. முந்தைய தலைமுறைக்கு ஒன்றுமே தெரியாது என்ற பொதுவான முன்கணிப்பு எதுவும் வைக்காமல், எல்லாரிடமும் கற்று கொள்ள ஏதாவது இருக்கும் என்ற புரிதல் மட்டும் இருக்க வேண்டும்.