பைல்ஸ் பிரச்சனை குறித்தும் அதற்கான சிகிச்சை வழிமுறைகளைப் பற்றியும் ஹோமியோபதி மருத்துவர் ஆர்த்தி விளக்குகிறார்.
ஆசனவாயில் உள்ள நரம்பு வீக்கத்தினால் ஏற்படுவது தான் பைல்ஸ் என்கிற மூல நோய். உள்ளுக்குள் இருக்கும் பைல்ஸ் நோயில் நமக்கு எந்த அறிகுறியும் தெரியாது. வெளியேற்றத்தின் போது ரத்தம் வெளிவரும். வெளியே ஏற்படும் பைல்ஸ் நோயில் அதிகமான எரிச்சல் இருக்கும், உட்காரும்போது வலி ஏற்படும். வெளியேற்றத்தின் போது கொஞ்சமாகவோ அதிகமாகவோ ரத்தம் வெளிவரும். பலருக்கு ஏற்படும் பைல்ஸ் என்பது வெளியே ஏற்படுவது தான்.
பல வருடங்களாக மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்களுக்கு பைல்ஸ் பிரச்சனை ஏற்படும். அதிகமான பளுவைத் தூக்குபவர்களுக்கும் இந்தப் பிரச்சனை ஏற்படும். கர்ப்ப காலத்தில் இருப்பவர்கள், வயதானவர்கள், குறைவான அளவில் தண்ணீர் குடிப்பவர்கள் ஆகியோருக்கு பைல்ஸ் பிரச்சனை ஏற்படும். சில நேரங்களில் மருந்துகளின் விளைவுகளினால் கூட இது ஏற்படும். குழந்தைகளைப் பொறுத்தவரை மலச்சிக்கல் மட்டுமே இதற்கான அறிகுறியாக இருக்கும்.
30 வயதுக்குப் பிறகு பலருக்கு பைல்ஸ் பிரச்சனை ஏற்படும். ஹோமியோபதியில் இதற்கான நல்ல மருந்துகள் இருக்கின்றன. ஆரம்ப கட்டத்திலேயே நம்மிடம் வரும்போது இதை முழுமையாக குணப்படுத்த முடியும். பைல்ஸ் பரிசோதனைக்காக மருத்துவரை அணுகுவதற்கு நாம் கூச்சப்படக்கூடாது. காலம் தாழ்த்தி மருத்துவரிடம் சென்றால் நோயை குணப்படுத்துவது கடினமாகிவிடும். ஹோமியோபதி சிகிச்சை எடுத்துக்கொண்டால் மீண்டும் பைல்ஸ் நோய் வராது.
ஹோமியோபதியில் உடனடியாக நோய் குணமாக வேண்டும் என்கிற எண்ணத்தில் பலர் நம்மிடம் வருகின்றனர். ஆனால் முழுமையாக குணமடைய நிச்சயம் காலம் எடுக்கும். இனிப்பு உணவுகள், மைதா, கோதுமை, கேக் போன்றவற்றை நிச்சயம் தவிர்க்க வேண்டும். கீரை, காய்கறிகள், பழங்களை நிறைய எடுத்துக்கொள்ள வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். பாத்ரூமில் நீண்ட நேரம் செலவழிக்கக் கூடாது. உணவு உண்ணுவதற்கு சற்று இடைவெளி விட வேண்டும்.
நன்றாக உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடல் எடையைக் குறைக்க வேண்டும். வயிற்றுக்கு அழுத்தம் கொடுப்பதுபோல் உடை அணியக்கூடாது. தண்ணீரால் ஆசனவாயை சுத்தப்படுத்தினால் நன்றாக இருக்கும் என்று தோன்றினால் நிச்சயமாக சுத்தப்படுத்தலாம். மருந்துகளோடு சேர்த்து நாம் சுத்தமாக இருப்பதும் முக்கியம்.