Skip to main content

வைரஸ் காய்ச்சலால் இறப்பு ஏற்படுமா? - டாக்டர் ராஜேந்திரன் விளக்கம்

Published on 02/12/2023 | Edited on 02/12/2023

 

 Dr Rajendran | Virus Fever | Dengue Fever |

 

இந்த மழைக்காலத்தில் அனைவரும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இது வெறும் காய்ச்சல்தானா? அல்லது அதைத் தாண்டி ஏதேனும் பிரச்சனை உருவாகுமா என்ற நமது கேள்விக்கு ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் டாக்டர் ராஜேந்திரன் விளக்கம் அளிக்கிறார்.

 

மழைக்கால நோய்கள் என்பது பல வகைகளில் உண்டு. அவற்றில் முக்கியமானது வைரஸ் காய்ச்சல். இது ஒரு நுண் கிருமிகளால் உண்டாவது. தற்போதைய மழைக்கால வைரஸ் காய்ச்சல்களில் எவற்றிற்கெல்லாம் நாம் கவனமாக இருக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இன்புளுயன்சா வைரஸ், ஹெச் 1 என் 1, ஸ்வைன் ப்ளூ, போன்ற வைரஸ் கிருமிகளால் ஏற்படுகிற காய்ச்சல்கள் ஆபத்து நிறைந்தவை. வைரஸ் தொற்றால் ஏற்படுகிற காய்ச்சல் வெறும் காய்ச்சல் மட்டுமில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். நிறைய வைரஸ் காய்ச்சலுக்கு மருந்தே இல்லை. இதனால் உயிருக்கே ஆபத்து ஏற்படும் சூழல் உண்டாகும். 

 

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவலாகி வருகிறது. இந்த டெங்கு காய்ச்சல் மூன்று நாட்களுக்கு கடுமையான காய்ச்சலாக இருக்கும். அதோடு உடல் வலி, இடுப்பில் கடுமையான வலி, கண்ணைச்சுற்றி வலி போன்ற வலிகளால் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அவதிப்படுவார்கள். அடுத்தடுத்த நாட்களில் குணமாகிவிடுவது போன்று தோன்றியிருக்கும் உடனே மருந்து எடுத்துக் கொள்வதை நிறுத்தி விடுவார்கள். அது மேற்கொண்டு பாதிப்பை ஏற்படுத்தும். 

 

குழந்தைகளுக்கு பெரியவர்களை விட நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். காய்ச்சல் 100 டிகிரிக்கு மேல் இருந்தது, நாங்களே மாத்திரை கொடுத்தோம். மூன்று நாளில் சரியாகி விட்டது என்று பள்ளிக்கு அனுப்பினோம், ஆனால் பள்ளியில் மயங்கி விழுந்து விட்டாள் என்று மருத்துவரை அணுகுவார்கள். தானாகவே மாத்திரை எடுத்துக் கொள்வது மிகவும் சிக்கலில் முடியும். 

 

காய்ச்சலை சரி பண்ண வெறும் பாராசிட்டமால் என்ற எண்ணத்தை முதலில் மனதிலிருந்து நீக்குங்கள். அது ஒரு வகை வலி நிவாரணி மருந்து மட்டுமே. முறையாக மருத்துவரை அணுகி, என்ன வகையான வைரஸ் தொற்று என்பதை உறுதி செய்ய இரத்த பரிசோதனை செய்து, அதற்கு தகுந்த சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். நல்ல ஓய்வு எடுக்க வேண்டும். நீர் ஆகாரம் உள் எடுத்துக் கொள்ளுதல் வேண்டும். இதுவே மழைக்கால காய்ச்சலில் இருந்து உங்களை காத்துக் கொள்ளும் முறையாகும்.