தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNUSRB) குளறுபடிகளைச் சுட்டிக்காட்டியதற்காகவே, தன்னை கொலை செய்ய தன் அலுவலகம் தாக்கப்பட்டுள்ளது என ஏ.டி.ஜி.பி. கல்பனா நாயக் பரபரப்பு புகார் ஒன்றைத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக டிஜிபி அலுவலகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், “இந்த சம்பவம் நடந்த அன்றே எப்2 எழும்பூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, உடனடியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இது தொடர்பாகத் திருவல்லிக்கேணி துணைக் காவல் ஆணையர், தடயவியல் நிபுணர்கள், மின்சார வாரியம் (TANGEDCO), தமிழ்நாடு காவல்துறை வீட்டு வசதிக் கழக நிபுணர்கள், புளூ ஸ்டார் நிறுவனத்தின் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு விரிவான விசாரணை நடத்தினர். இதையடுத்து, இந்த வழக்கு சென்னை நகர மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு, கூடுதல் டி.சி.பி., விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இதன் மூலம் விரிவான விசாரணை நடத்தப்பட்டது. அப்போது 31 சாட்சிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன.
மேலும் தீ விபத்துக்கான காரணத்தைக் கண்டறியத் தடய அறிவியல், தீயணைப்பு சேவைகள் மற்றும் மின் துறைகளின் நிபுணர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டது. தற்போது நிபுணர்களின் அறிக்கைகள் பெறப்பட்டுள்ளன. அதில் செப்பு கம்பிகளில் ஷார்ட் சர்க்யூட் இருப்பதற்கான ஆதாரங்கள் காணப்பட்டதாக தடயவியல் நிபுணர்களின் அறிக்கையில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இதுவரை நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், வேண்டுமென்றே தீ வைப்பதற்கான சதிச் செயல் எதுவும் இல்லை என்பது தெளிவாகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.