Skip to main content

செல்வம் பெருக்கும் லட்சுமி குபேர பூஜை செய்யும் முறை!

Published on 13/11/2020 | Edited on 13/11/2020

தீபாவளி 14-11-2020

"பொருளில் லாருக்கு இவ்வுலகமில்லை; அருளில்லாருக்கு எவ்வுலகும் இல்லை' என்பது பழமொழி. மனிதன் வாழ்க்கையை செம்மையாக நடத்த பொருள் மிகவும் அவசியம்.
kuberer
பொருளை அருளோடு பெறவேண்டும்.

பொருளும் அருளும் நாணயத்தின் இருபக்கம் போன்றது. ஆனால், நடைமுறை வாழ்வில் பொருள் இருப்பவர் களிடம் அருளில்லை;

அருள் இருப்பவர்களிடம் பொருளில்லை. ஏனெ னில், உலகில் வாழும் அனைத்து மனிதர்களின் எண்ணமும் காசு, காமம், சொத்து ஆகிய மூன்று ஆசைகளைச் சுற்றியே அலைபாய்ந்து வருகிறது. இந்த முயற்சியில்தான் ஒவ்வொரு மனிதனும் போராடி வருகிறான்.

அந்த போராட்டத்தில் செல்வத்தில், அந்தஸ்தில், புகழில், கௌரவத்தில் மற்றவரைக் காட்டிலும் தான் சிறந்து விளங்க வேண்டுமென்னும் ஆசையில், பொருளீட் டும்போது தார்மீகமற்ற எண்ணங்கள் மிகைப்படுத்தலாக வெளிப்படுகிறது. நேர்மையான வழியோ குறுக்குவழியோ- அனைவருக்கும் பொருள் வசப்படுவதில்லை.

சிலர் கோடிகளுக்கு அதிபதிகளாகத் திகழ்கிறார்கள். பலர் லட்சங்களுக்கு சொந்தக் காரர்களாக வாழ்கிறார்கள். இன்னும் பலரின் நிலை அன்றாடத் தேவைகளை மட்டுமே நிறைவு செய்யும் வகையில் இருக்கிறது. சில பிரிவினருக்கு அன்றாடத் தேவைகளுக்கே தடுமாறும் சூழ்நிலை இருந்துவருகிறது. பிறக்கும்போதே செல்வச்செழிப்பான பெற்றோருக்குப் பிறப் பதற்கும், ஏழ்மையில் வாடும் பெற்றோருக்குப் பிறப்பதற்கும் காரணம் அவரவரின் ஊழ்வி னையே.

ஒருவர் தன் வினைப் பயனின் அடிப்படையில் பெறும் செல்வம் மூன்று வகைகளில் வரும்.

1. லட்சுமி செல்வம்

வம்சாவளியாக- வாழை யடி வாழையாக பெரும் பணவசதியுடன் வாழ்பவர் கள். பதினாறு வகைச் செல்வங்களும் நிலைத்து நிறைந்திருக்கும். இந்த செல்வம் பல தலைமுறைக் கும் நிலைத்து நிற்கும். பிறவியிலேயே கொடை யுள்ளம் கொண்டவர் களுக்கே இத்தகைய செல்வம் கிடைக்கும்.இவர்களுடைய தலைமுறையினரின் ஜாதகத்தில் தர்மகர்மாதிபதி யோகம் வரமாக செயல் படும். தர்மத்தைக் கடைப்பிடிப்பவர்கள்.

சிவ பக்தர்களாக இருப்பார்கள். தனது பண்பாலும் குணத்தாலும், பணத்தாலும் செய்கையாலும் மற்றவர்களை மகிழ்விப் பவர்கள்.

2. குபேர செல்வம்

ஆத்மார்த்தமாக மனமுருகி குபேரனை வழிபடுபவர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம், பங்குச்சந்தை, திடீர் தொழில் லாபம், வாரிசு இல்லாத உயில் சொத்து, லாட்டரி போன்றவற்றின்மூலம் கிடைக்கும் செல்வம் குபேர செல்வம். அதாவது, கோட்சார குரு, சனிப்பெயர்ச்சியின்மூலம் கிடைக்கும் திடீர் தனயோகம் அல்லது 2, 5, 9, 11-ஆம் அதிபதிகளின் தசாபுக்திக் காலங்களில் மட்டும் நடமாடும் திடீர் செல்வம். கோட்சார கிரகங்கள் பாதகமாக மாறும்போது அல்லது தசாபுக்தி பாதகமாகும்போது திடீரென வேகமாக வந்த செல்வம், எப்படி வந்ததோ அப்படியே வேகமாகப் போய்விடும். இவர்களுடைய ஜாத கத்தில் குரு, சனி வக்ரமாக இருக்கும் அல்லது தர்மகர்மாதிபதி யோகம் சாபமாக செயல்படும். திடீர் பணத்தை பகட்டாகப் பயன் படுத்தாமல் தானம், தர்மம் செய்து, பயபக்தியுடன் தர்மத்தைக் கடைப்பிடித்து வாழ்ந்தால், வேகமாக வந்த செல்வம் மூன்று தலைமுறைக்கு நிலைத்திருக்கும்.

kuberer


3. இந்திர செல்லம்

இந்திர சம்பத்துக்களின் அடை யாளமான அரசுப் பதவி, கால்நடைகள், வீடு, பொன், பொருள் சேர்க்கை போன்றவை ஓரிரு தலைமுறைக்கு மட்டுமே நீடிக்கும். இவர்களின் ஜாதகத்தில் ஐந்தாமிடமான பூர்வ புண்ணிய ஸ்தானமும், ஒன்பதாமிடமான பாக்கிய ஸ்தானமும் பலமிழந்திருக் கும். முன்னோர்களின் சேமிப்பை எளிதில், இருந்த இடம் தெரியாமல் அழித்துவிடுவார்கள். ஜனனகால ஜாதகத்தில் ஐந்து மற்றும் ஒன்பதாமிட வலிமைக் குறைவால் பூர்வீகச் சொத்தைப் பாதுகாக்க முடியாமல் இருப்பவர்கள் குல, இஷ்டதெய்வ வழிபாட்டை முறைப் படுத்த, விரும்பிய நற்பலன்கள் தேடிவரும். எந்த வகைச் செல்வமாக இருந்தாலும், கர்மவினைக்கேற்ப வாழ்வாதாரத்தில் கண்டிப்பாக மாறுபாடு இருக்கும். கர்மவினையைக் களைந்து, செல்வச்செழிப்பை அடைய வேண்டுமென்னும் ஆதங்கத்தில்தான் ஒவ்வொரு மனிதனும் பலவழிகளையும் தேடியலைகிறான். அதற்காக ஜாதகம், பரிகாரம், மந்திரம், எந்திரம், தந்திரம், கோவில், குளம் எனவும் தேடியலைகிறார் கள். அப்படி எத்தனைக் காலம் தேடியலைந் தாலும் எளிதில் குபேர அந்தஸ்தைப் பெறமுடிவதில்லை.

கர்மவினையைக் களைந்து, எளிதில் லட்சுமி கடாட்சம் பெறவும், குடும்பத்தைச் சூழ்ந்திருக்கும் இருளை நீக்கி குபேர செல்வத்தைப் பெறவும், நமது முன்னோர் கள் கடைப்பிடித்த வழிபாடு தீபாவளித் திருநாளில் செய்யப்படும் லட்சுமி குபேர பூஜையாகும். "கொரோனா'வால் வாழ்வாதாரம் பாதித்து, அடிப்படைத் தேவைகளை நிறைவுசெய்வதே கடினமாகவுள்ள இந்த காலகட்டத்தில், உடனடி பணத்தேவைகளை நிறைவு செய்யக்கூடிய வழிபாடு எனில், அது லட்சுமி குபேர பூஜை மட்டுமே! செல்வத்துக்கு அதிபதியாகத் திகழும் குபேரன், பக்தியுடன் பூஜிப்போருக்கு சகல ஐஸ்வர்யங்களையும் அருள்பவர். செல்வத்தை அள்ளித்தருபவர் குபேரன். ஆனால், அவர் செல்வத்தை உருவாக்கும் கடவுளல்ல. அவரது பணி பக்தர்களுக்கு செல்வத்தை முறையாகப் பகிர்ந்தளிப்பது மட்டுமே. செல்வத்தை உருவாக்கி, அதை குபேரனிடம் முறையாகப் பகிர்ந்தளிக்கக் கூறித் தருபவள் மகாலட்சுமி. உலகிலுள்ள அனைத்து செல்வங் களிலும் குடிகொண்டிருப்பவள் மகாலட்சுமி. தனம், தான்யம், சந்தானம், சௌபாக்கியம், வைராக்கியம், தைரியம், வெற்றி, மன அமைதி என அனைத்தையும் வழங்குபவள். எனவேதான் குபேரன், லட்சுமி குபேரன் என சிறப்பிக்கப்படுகிறார். எந்த எதிர்பார்ப்பு மின்றி தவமியற்றி, சிவனை தரிசித்த காரணத்தால்தான் உலக நிதிகளையெல்லாம் நிர்வகிக்கும் பொறுப்பை குபேரன் பெற்றார். பத்மம், மகாபத்மம், மகரம், கச்சயம், குமுதம், நந்தம், சங்கம், நீலம், பத்மினி நிதி என நவநிதிகளையும் பாதுகாத்து அருளுபவர். இவற்றுள் சங்கநிதி மற்றும் பதுமநிதி செல்வம் வற்றாமல், அள்ள அள்ள அதிகரிக்கும் ஆற்றல் மிகுந்த நிதிகள். குபேரனின் வலப்புறத்தில் சங்கநிதியும், இடப்புறத்தில் பதுமநிதியும் இருப்பார்கள். சங்கநிதி கையில் சங்கு வைத்திருப்பார். இவரது கை வரமுத்திரை தாங்கியிருக்கும். பதுமநிதியின் கையில் தாமரை இருக்கும். தாமரையும் சங்கும் செல்வத்தின் அடையாளங்கள். இவர்கள்தான் குபேரனிடம் செல்வம் பெற அனுமதி கொடுப்பவர்கள்.பணக் கஷ்டத்தால் துன்பப்படுபவர் இதுவரையில் கொடிய பாவங்கள் செய்யாமலிருந்தால், வழிபட்டவுடன் கோடீஸ்வரனாக்குவது குபேரனின் பணி. இத்தகைய சிறப்பு மிகுந்த லட்சுமி குபேர பூஜை சார்வரி வருடம், ஐப்பசி மாதம் 29-ஆம் நாள் (14-11-2020) அன்று நடைபெறவிருக்கிறது.

பூஜைசெய்யும் முறை

எந்த பூஜை செய்தாலும், முதலில் வீடு, வாசலை சுத்தம்செய்ய வேண்டும். வாசலில் வண்ணகோலமிட்டு, பூஜையறையில் குபேரர் கோலமிடவேண்டும்.

மஞ்சள் பிள்ளையார் மற்றும் குலதெய்வத்தை மனதார வேண்டி, பூஜையில் ஆவாகனம் செய்வது மிக முக்கியம். அதன்பிறகு, பூஜையறையில் லட்சுமி குபேரர் படம் வைத்து, தலைவாழையிலை விரித்து, அதில் நவதானியங்களைப் பரப்பி, புனிதநீர் நிரம்பிய கலசத்தை அதன்மேல் வைத்து மஞ்சள், குங்குமமிட்டு, மலர்களால் அலங்காரம் செய்யவேண்டும். வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் முதலான நைவேத்தியப் பொருட்களோடு, தட்சணையாகப் பணம் மற்றும் சில்லரை நாணயங்களையும் சேர்த்து, கலசத்துக்கு முன்பாக வைத்து மகாலட்சுமி மற்றும் குபேரனைப் பூஜையில் ஆவாகனம் செய்யவேண்டும்.

பிள்ளையாரின் மூலமந்திரம் மற்றும் அஷ்டோத்திரம் சொல்லி வழிபட்டபிறகு, குலதெய்வத்தை வழிபடவேண்டும்.

மகாலட்சுமியின் அஷ்டோத்திரம், ஸ்ரீசூக்தப் பாடல்களைப் பாராயணம் செய்யவேண்டும்.

பூஜையில் லட்சுமி குபேரரின் திருவருளால் அனைத்து செல்வங்களும்- அதாவது தனம், தான்யம், மக்கட்செல்வம், வீடு, தைரியம், வீரம், அறிவு என அனைத் தையும் பெறவேண்டுமென சங்கல்பம் செய்யவேண்டும். இதைத்தொடர்ந்து, குபேரனுக்கும் கலசத்துக்கும் உதிரிப் பூக்களைப் போட்டு அர்ச்சனை செய்ய வேண்டும். அர்ச்சனை செய்து முடித்ததும், வாழைப்பழம், காய்ச்சிய பசுப்பால், பாயசம் ஆகியவற்றை லட்சுமி குபேரருக்கு நைவேத்தியம் செய்து, கற்பூர தீபாராதனையோடு பூஜையை நிறைவுசெய்ய வேண்டும். தாம்பூலத்தில் வைத்திருந்த தட்சணையை மஞ்சள் துணியில் முடிந்து பணப் பெட்டி அல்லது மணிப் பர்ஸில் வைப்பது சிறப்பு.

இந்த பூஜை மாலை வேளையில் செய்யப்படும் ஒரு வழிபாடாகும். மகாவிஷ்ணுவின் மார்பில் வாசம்செய்யும் மகாலட்சுமி தீபாவளித் திருநாளில் நமது இல்லம் தேடிவருவதாக ஐதீகம். எனவே, தீபாவளியன்று மாலை 6.00 மணிக்கு முன்பே லட்சுமி குபேர பூஜைசெய்வது நல்லது. ஐப்பசி மாதத்தின் அமாவாசை நாளின் பிரதோஷ வேளையிலும், கோதூளி லக்ன காலத்திலும் செய்யவேண்டும். சூரியனும் சந்திரனும் இணையும் அமாவாசைத் திதியில் துலா மாதத்தில் லட்சுமி குபேரனை வழிபாடு செய்தால் அனைத்து நலன்களும் கிடைக்கும்.

பூஜை முடிவில் ஆரத்தி எடுக்கையில்-

"ஓம் ராஜாதிராஜாய பிரசஹ்ய சாஹினே

நமோவயம் வைஸ்ரவனாய குர்மஹே

ஸமேகமான் காம காமாய மஹ்யம்

காமேஸ்வரோ வைஸ்ரவனோ ததாது

குபேராய வைஸ்ரவனாய மகாராஜய நம:'

என்னும் மந்திரத்தைக்கூறி வழிபட, பூஜைப் பலன் எளிதில் வசப்படும்.

நாணய வழிபாடு

தீபாவளியன்று லட்சுமி குபேர பூஜையோடு, குபேர பகவானுக்கு நாணய வழிபாடு செய்வதும் மிகமிக விசேஷமாகும். குபேர பகவானுக்குகந்த எண் ஐந்து என்பதால், 108 ஐந்து ரூபாய் நாணயங்களை சுத்தம் செய்து, அதனைக்கொண்டு அர்ச்சனை செய்வது மிகவும் விசேஷமாகும். குபேர பகவானின் 108 போற்றிகளைச் சொல்லி வழிபாடு, அர்ச்சனை செய்யவேண்டும்.

தீபாவளியன்று குபேர பகவானுக்காகச் செய்யப்படும் இந்த நாணய வழிபாடு நிலையான செல்வத்தைப் பெற்றுத் தரும். நாணய பூஜையைச் செய்துமுடித்த தும் பால் மற்றும் சர்க்கரை கலந்த சிவப்பு அவல் நைவேத்தியம் செய்ய வேண்டும்.

லட்சுமி குபேர பூஜைசெய்ய உகந்த நாட்கள்

தீபாவளித் திருநாள், சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, கார்த்திகை மாதங்கள், பூரட்டாதி நட்சத்திர நாட்கள் மற்றும் வியாழக்கிழமை மாலை 5.00 மணிமுதல் இரவு 8.00 மணிவரை குபேர காலம்.

லட்சுமி குபேர பூஜைசெய்வதால் ஏற்படும் நன்மைகள்

சந்தர்ப்பம் அமையும்போது இந்த லட்சுமி குபேர பூஜையைத் தொடர்ந்து செய்துவருவதால் தொழிலில் சீரான வளர்ச்சி ஏற்படும். வீட்டில் தானிய வகைகள் நிரம்ப இருக்கும். உத்தியோகம், ஊதிய உயர்வு கிடைக்கும்.பணவரவு அதிகரிக்கும். கிடைத்த செல்வம் பெருகி பல தலைமுறைகளுக்கு நிலைத்து நிற்கும்.

பல தலைமுறையாகத் தீராத கடன் தீரும். வாராக் கடன் வசூலாகும். தீர்க்கமுடியாத சொத்து தொடர்பான வழக்கு முடிவுக்கு வரும். குடும்பத்தில் சந்தோஷமும் நிம்மதியும் பெருகும்.

எந்திரத்தனமாகப் பொருளைத்தேடும் மனிதன் அதை சம்பாதிக்கப் பலரது ஆசிகளை இழப்பதோடு, அறிந்தோ அறியாமலோ அவர்களது சாபத்தையும் சம்பாதிக்கிறான். கெடுதல் செய்தால் மட்டும் சாபமல்ல. மனதைப் புண்படுத்துவதும் சாபம்தான். காலம் முழுவதும் தான் சுகமாக வாழ பிறரை வஞ்சித்தும், சாபத்தைப் பெற்றும் வாழும் மனிதர்களுக்கு அருளோ ஆசியோ கிடைப்பதரிது.

குரோதம், மோகம், ஆணவம் ஆகிய மூன்றும் செல்வத்தால், பொருளால் வருவது. ஆனால் அருள் வராது. கோவில்களுக்குச் செல்வதால்- தானதர்மம் வழங்குவதால் ஒருவர் பாவங்களை அழிக்கமுடியாது. சக மனிதர்களிடம் அன்பு, பணிவு, அமைதி ஆகியவை இருந்தால், அருளோடு பொருளும் தானாக வந்துசேரும்.

இந்த தீபாவளித் திருநாளில் லட்சுமி குபேரரிடம், அறிந்தும் அறியாமலும் செய்த தவறுக்கு மன்னிப்புக் கோரி, அருளோடு நிரம்பிய பொருள் பெற்று வாழ நல்வாழ்த்துகள்!

 -பிரசன்ன ஜோதிடர் ஐ.ஆனந்தி