
மலேசியா நாட்டின் தலைநகர் கோலாலம்பூர் கன்வென்சன் நடுவத்தில் மூன்று நாட்கள் உலகத் தமிழர் பொருளாதார நடைபெற்றது. இதில் மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அவர் பேசியதாவது “மாநாட்டின் பார்வையாளராக வந்த என்னை இரண்டாவது நாள் அமர்வில் நடைபெற்ற வேளாண்மை குறித்த அமர்வில் நிறைவுரை ஆற்ற பணித்தனர். பேச்சின் தொடக்கத்தில் சொன்னேன் திருமணத்தை காணச் சென்றவன் எதிர்பாராத விதமாக மாப்பிள்ளை ஆனதைப் போல, வந்த என்னை பேச வைத்து விட்டீர்கள். இது 11வது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு. 11வது மாதத்தில் 11வது அமர்வில் நிறைவுரையாற்ற கிடைத்த வாய்ப்பைப் பெற்று உங்கள் முன் நிற்கின்றேன்.
ஆயிரம் முகங்கள் கடந்து சென்றாலும் ஒரு சில சந்திப்புகள் மட்டுமே அர்த்தம் உள்ளதாக இருக்கும் என்பதைப் போன்று இந்த நவம்பர் 16-ஆம் நாளை தமிழர்கள் மறக்கக் கூடாது. ஆம், பெருமக்களே இந்த நவம்பர் 16-இல் தான் 164 ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளையர்கள் 1860-ஆம் ஆண்டு சென்னை துறைமுகத்தில் இருந்து துருரோ கப்பலில் வட மாவட்டத்தைச் சேர்ந்த உடல் உழைப்பு வர்க்கத்தினரை ஏற்றிச் சென்று தென் ஆப்ரிக்கா நாட்டின் நேட்டல் மாகாணம் டர்பன் துறைமுகத்தில் இறக்கப்பட்ட நாள்.
இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இரண்டு வகையான விவசாயக் கூறுகள். ஒன்று நிலவுடைமை சமுதாயம், மற்றொன்று உடலுழைப்பு சமுதாயம். நிலவுடைமை சமுதாயம் சிறுபான்மையினர், உடல் உழைப்பு சமூதாயம் பெரும்பான்மையினர். இந்த இரண்டுக்கும் இடையேயான வர்க்க பேதங்களே நேற்று இன்று நாளைய அரசியலும் புரட்சிகளும். உலகம் முழுவதும் நடைபெற்ற புரட்சியின் திறவுகோல் பட்டினியால் நடைபெற்று நாடுகள் விடுதலைப் பெற்றது. ரஷ்யா, பிரான்ஸ் போன்ற வல்லரசு நாடுகளின் புரட்சி ரொட்டி உணவுக்காகத்தான் நடைபெற்றது என்று புரட்சியை கோடிட்டு காட்டுகிறேன்.
நாகரிகங்கள் நதிக்கரையில் தோன்றியது, வேட்டை கால மனிதர்கள் நாடோடிகளாக சுற்றி வந்தனர். வேட்டை முடிந்த இடத்தில் நாகரிகம் தொடங்கியது. நாகரிக மனிதன் காட்டிற்கும் நாட்டிற்கும் இடைப்பட்ட பகுதியில் நதிக்கரைக்கு அருகே வாழ்ந்து வந்தார்கள். அதுவே கிராமம், ஊர் நகரம் மாநகரமாக விரிவடைந்து இன்றைய நிலை உருவானது.
வலசை சென்றப் பறவைகள் சரணாலயங்களில் சந்திப்பதைப் போன்று உலகத்தின் பல பகுதிகளில் குடியேறிய தமிழர்கள் ஒரு சேர சந்திக்கும் மாநாடாக நடைபெற்று வருகிறது மலேசியா உலகத் தமிழர் பொருளாதார மாநாடு” என்று பேசினார்