காளி படம் அவமரியாதை செய்யப்பட்டதாக கூறப்பட்ட சம்பவத்திற்கு உக்ரைன் துணை வெளியுறவுத்துறை அமைச்சர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் (30.04.2023) உக்ரைன் பாதுகாப்பு துறை அமைச்சக ட்விட்டர் பக்கத்தில் இந்த மதக் கடவுளான காளியின் படத்தை கேலிச்சித்திரமாக சித்தரித்து ட்வீட் செய்திருந்தனர். இதனால் காளியை அவமரியாதை செய்யும் விதமாக இந்த பதிவு இருப்பதாக கூறி சமூக வலைத்தளங்களில் இந்த புகைப்படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியது. பொதுமக்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் இந்த புகைப்படம் ட்விட்டரில் இருந்து நீக்கப்பட்டது.
இந்த நிலையில் இச்சம்பவம் குறித்து தற்போது வருத்தம் தெரிவித்துள்ள உக்ரைனின் துணை வெளியுறவுத்துறை அமைச்சர் எமின் ட்சாபரோவா தனது ட்விட்டர் பதிவில், "இந்து தெய்வமான காளியை அவமரியாதை செய்யும் விதத்தில் சித்தரித்ததற்கு நாங்கள் வருந்துகிறோம். தனித்துவமான இந்திய கலாச்சாரத்தையும், அதன் ஆதரவையும் உக்ரைன் மக்கள் மிகவும் மதிக்கிறார்கள். காளியின் சித்தரிப்பு படம் ஏற்கனவே நீக்கப்பட்டுள்ளது. மேலும் பரஸ்பர மரியாதை நட்புணர்வில் ஒத்துழைப்பை இன்னும் அதிகரிக்க உக்ரைன் உறுதியாக உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.