28 ஆண்டுகளுக்கு பின் ஒரு பெண் கோமாவிலிருந்து கண்விழித்த சம்பவம் அமீரகத்தில் நடந்துள்ளது. அமீரகத்தை சேர்ந்த முனிரா அப்துல்லா கடந்த 1991 ஆம் ஆண்டு தனது 4 வயது மகன் ஒமர் வெபய்ரைப் பள்ளியில் இருந்து காரில் அழைத்து வந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் காரின் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் மகன் ஒமரைக் காப்பாற்றும் பொருட்டு அவரை கட்டியணைத்தவாறே காருக்குள் கிடந்தார் முனிரா. முனிரா கைக்குள் இருந்த ஒமர் சிறிய காயங்களுடன் தப்பினார். ஆனால் அவரது தாயோ பலத்த காயமடைந்து கோமா நிலைக்கு தள்ளப்பட்டார்.
தொடந்து 28 ஆண்டுகளாக சிகிச்சை நடந்து வந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு இவரை பற்றி தகவல் அறிந்த அமீரக இளவரசர் முனிராவின் சிகிச்சை செலவுகளை ஏற்றுக்கொண்டார். அதன்பின் ஜெர்மனி நாட்டிற்கு அழைத்துச்செல்லப்பட்ட அவர் அங்கு தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.
28 ஆண்டுகால தீவிர சிகிச்சைக்கும், காத்திருப்புக்கு கிடைத்த வெற்றியை முனிரா தனது கண்களை திறந்து கோமாவை விட்டு வெளியே வந்தார். அப்போது அவர் அருகில் அவரது மகன் ஒமர் அவரை பார்த்து புன்னகைத்துள்ளார். கடைசியாக 4 வயதில் தன் மகனை பார்த்த தாய் மீண்டும் அவருக்கு 32 வயதான போது தனது மகனை பார்த்தார்.
பார்த்தவுடன் அடையாளம் கண்டுகொண்ட அவர், பதிலுக்கு தன் மகனை பார்த்து புன்னகைத்துள்ளார். 28 ஆண்டுகளுக்கு பிறகு சுயநினைவுடன் தன் தாயை பார்த்த ஒமர் தன் தாயிடம், " ''அம்மா நீங்கள் என்னை நேசிக்கிறீர்களா?'' என கேட்டுள்ளார். உடைந்த தழுதழுத்த குரலில், ''ஆம்'' என பதிலளித்திருக்கிறார் முனிரா. அதற்கு ஒமர் ''உங்களை நான் இன்னும் அதிகமாக நேசிக்கிறேன்" என பதிலளித்துள்ளார்.
இது பற்றி பின்னர் ஒமர் அந்நாட்டு ஊடகங்களில் பகிர்ந்துகொண்டபோது, "நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். எந்தப் பிரச்சினை என்றாலும் மனதை தளர விடாமல் நம்பிக்கையுடன் காத்திருங்கள். முயற்சி செய்யுங்கள். ஒரு நாள் எல்லாமே மாறும். உங்களுக்குப் பிடித்தமானவர்கள் மீதான நம்பிக்கையை எப்போதும் இழந்துவிடாதீர்கள். இதற்கு என் அம்மாவே வாழும் ஆதாரம்தான்" என தெரிவித்துள்ளார்.