ரஷ்யாவில் இந்தியா - ரஷ்யா இடையிலான 22வது வருடாந்திர உச்சி மாநாடு இன்று (08-07-24) நடைபெறுகிறது. இந்நிலையில் இந்திய பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோ சென்றடைந்தார். அப்போது ரஷ்யாவின் முதல் துணைப் பிரதமர் டெனிஸ் மாந்துரோவ் அவரை வரவேற்றார். இந்த வரவேற்பின் போது பிரதமர் மோடிக்கு அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது. விமான நிலையத்தில் இருந்து ஒரே காரில் பிரதமர் மோடியுடன் டெனிஸ் மந்துரோவும் தங்கும் விடுதிக்கு செல்ல உள்ளார். இதனையடுத்து ரஷ்ய அதிபர் புதினை இன்று (08.07.2024) சந்திக்க உள்ளார். அதோடு மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் புதினுடன் 22 வது இந்தியா - ரஷ்யா வருடாந்திர உச்சி மாநாட்டை தொடங்கி வைக்க உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி வரவிருக்கும் மாஸ்கோவில் உள்ள ஹோட்டலுக்கு வெளியே ரஷ்ய பக்தர்கள் பஜன் பாடினர். அங்குள்ள ஹோட்டலுக்கு வெளியே ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் பிரதமர் நரேந்திர மோடி கை குலுக்குவதைக் காட்டும் ஒரு கட்அவுட் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மாஸ்கோவில் உள்ள ரஷ்ய கலைஞர்கள் பிரதமர் மோடியை வரவேற்க இந்தி பாடல்களில் நடனமாடினர். இந்தியா - ரஷ்யா இடையிலான இரு நாட்டு உறவுகள், உலகளாவிய முக்கிய பிரச்சனைகள் குறித்து ரஷ்ய அதிபர் விளாடிமர் புடினுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி இந்திய வம்சாவளியினர் மத்தியில் உரையாற்ற உள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டிற்குப் பிறகு சுமார் 5 ஆண்டுகள் கழித்து பிரதமர் மோடி ரஷ்யா பயணம் மேற்கொண்டுள்ளார். 2019ஆம் ஆண்டில் ரஷ்யாவில் நடைபெற்ற பொருளாதார மாநாட்டில் பிரதமர் மோடி நேரில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து, பிரதமர் மோடி ரஷ்யாவில் இருந்து நாளை (09-07-24) ஆஸ்திரியா செல்கிறார். அங்குச் செல்லும் அவர் அந்நாட்டு அதிபர் அலெக்ஸாண்டர் வான்டெர் பெல்லனை சந்தித்துப் பேசுகிறார். அதனைத் தொடர்ந்து, அந்நாட்டுப் பிரதமர் கார்ல் நெகமருடன் மோடி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இந்தப் பயணத்தின் மூலம் 41 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரியாவிற்குச் செல்லும் முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையை மோடி பெற உள்ளார்.